உள்ளூர் செய்திகள்

‘செயல்வழி கல்வி திட்டத்தை அமல்படுத்த மாட்டோம்’

சென்னை: “செயல்வழி கல்வி திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்காததால், அந்த திட்டத்தின்படி பாடம் நடத்த மாட்டோம். பழைய முறையில் தான் பாடம் நடத்துவோம்,” என்று தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் அப்துல் மஜீத் அறிவித்துள்ளார். இது குறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் 19 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் பார்த்தால் 39 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும். தற்போது 99 மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் என்ற நிலை இருக்கிறது. இரண்டு ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்பட்டு அதில் ஒரு ஆசிரியர் மட்டும் பணி புரிந்து வரும் பள்ளிகளின் எண்ணிக்கை 900. இரண்டு ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளும் அதிகமாக இருக்கின்றன. இதுபோன்ற நிலையில் செயல்வழி கற்றல் திட்டத்தின்படி பாடம் நடத்த முடியாது. திட்டம் நல்லதாக இருந்தாலும், அதை முழுமையாக செயல்படுத்த போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் சார்பில் ஆறாம் தேதி முதல் காலவரையற்ற பட்டினி போராட்டம் நடைபெறும். கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் எட்டாம் தேதி முதல் செயல்வழி கற்றல் திட்டத்தின்படி பாடங்களை நடத்த மாட்டோம். பாடப் புத்தக முறையிலேயே பாடம் நடத்துவோம். இவ்வாறு மஜீத் கூறினார். இதே திட்டம் குறித்து தமிழ்நாடு சம கல்வி வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில அமைப்பாளர் தாஸ், நிருபர்களிடம் கூறுகையில்,‘செயல்வழி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வகுப்பறை சூழல் மாறியுள்ளது. குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்குமான இடைவெளி குறைந்துள்ளது. குழந்தைகள் மகிழ்ச்சியாக கல்வி கற்கின்றனர். ஆனால், வேண்டுமென்றே சில சங்கத்தினர் திட்டத்தை குறை கூறுகின்றனர்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்