மாற்றுத்திறனாளிகள் தொழில் செய்ய இலவச பயிற்சி
மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக தொழில்புரிய ஏதுவாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவசமாக நடத்தப்படும் இந்த பயிற்சிகளில் சேர விரும்புவோர் திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் ஆஷிஷ்சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். 8- ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 30 வயது வரையுள்ள கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் சரிபார்ப்பு பயிற்சி இலவசமாக 3 மாத கால பயிற்சியாக வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் செல்போன் கடைகளில் பணிவாய்ப்பு பெறலாம். சொந்தமாக செல்போன் சரிபார்க்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருமானம் ஈட்டலாம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 30 வயது வரையிலான பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 6 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவை தவிர 12-ம் வகுப்பு அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு மருத்துவக்கல்லூரியில் லேப் டெக்னீசியன் டிப்ளமோ பயிற்சி வழங்கப்படுகிறது. மேற்கண்ட பயிற்சிகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வழங்கப்படுகிறது. இந்த இலவச பயிற்சிகளைப் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது பெயர், முகவரி, கல்வித்தகுதி, தொலைபேசி எண் ஆகியவற்றோடு தாங்கள் பெற விரும்பும் பயிற்சி குறித்த விவரத்தையும் குறிப்பிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகலுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருவள்ளூர் - 602001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். தங்கள் எதிர்காலத்தை வளமாக்கி தொழில் திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் இலவசமாக வழங்கப்படும் தொழில் பயிற்சி வாய்ப்புகளை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆசிஷ் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.