சித்த, ஆயுர்வேத மருத்துவ இடங்களுக்கு அனுமதி
இதனால், சென்னையில் அக்டோபர் 13ம் தேதி துவங்கி நடைபெற்று வந்த இந்திய மருத்துவ முறை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உட்பட அரசு இந்திய முறை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் சிலவற்றில் மாணவர்களை சேர்க்க இந்திய மருத்துவ முறை மத்திய கவுன்சில் அனுமதி வழங்க மறுப்புத் தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத் துறை வழக்குத் தொடர்ந்திருந்தது. வழக்கு விசாரணையில், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 100 பி.எஸ்.எம்.எஸ். இடங்கள், நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் 50 பி.ஏ.எம்.எஸ். இடங்கள் ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்க்க அனுமதி அளிக்குமாறு இந்திய மருத்துவ முறை மத்திய கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதேப்போன்று சேலத்தில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறையில் உள்ள ஏடிஎஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கும் மாணவர்களைச் சேர்க்க அனுமதி அளிக்குமாறு மத்திய கவுன்சிலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 13ம் தேதி துவங்கிய மாணவ சேர்க்கைக்கான கலந்தாய்வை தேர்வுக் குழு தள்ளி வைத்துள்ளது. அக்டோபர் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 13ம் தேதி நடந்த கலந்தாய்வின் மூலம் சித்தா, இயற்கை-யோகா மருத்துவப் படிப்பு இடங்கள் என மொத்தம் 97 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கை செல்லும். அதேப்போல வரும் 21ம் தேதி முதல் நடைபெற உள்ள கலந்தாய்வில், ஏற்கனவே அனுமதிக் கடிதம் பெற்றவர்களும் பங்கேற்று, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தால் அவர்களுக்கும் மறு ஒதுக்கீடு முறையில் சேர்க்கை கடிதம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.