கட்டாயக் கல்வி குறித்த விழிப்புணர்வு தேவை
தொடர்ந்து மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு கட்டாயக் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். அனைத்து மாநில கல்வித் துறை அமைச்சர்களின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கபில் சிபல், கீழ்த்தர மக்களும் பயன்பெறும் வகையில் கட்டாயக் கல்வி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய அரசுடன் மாநில அரசுகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார். சுமார் 20 மாநிலங்களில் கட்டாயக் கல்வி குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை இச்சட்டத்தை நிறைவேற்றாத மாநிலங்களில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆறு முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி அறிவு பெறுவது அவர்களது உரிமை என்பதை கட்டாயக் கல்வி உறுதி செய்கிறது என்றார் அவர்.