உள்ளூர் செய்திகள்

யுரேஷிய நாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு...

யுரேஷிய நாடுகளில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் மருத்துவம் உட்பட குறுகிய கால படிப்புகளை படிக்க இந்திய மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்திருப்பதன் காரணமாக, மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யுரேஷிய நாடுகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் இடங்களில் சில பல்கலைக்கழகங்கள்/கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க உகந்ததாக இல்லை. யுரேஷிய நாடுகளில் பல அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களும், படிப்புகளும் உள்ளன. இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்களை யுரேஷிய கண்டத்தைச் சேர்ந்த மற்ற நாடுகளே ஏற்றுக் கொள்வதில்லை. ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், ஆர்மீனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், டர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா ஆகிய நாடுகளை அடங்கியதுதான் யுரேஷியா கண்டமாகும். இந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள், அவர்களது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பான இடமா அது என்பதையும், நீங்கள் பயிலும் கல்வி நிறுவனம் அங்கீகாரம் பெற்றுள்ளதா, பாடப்பிரிவு அங்கீகரிக்கப்பட்டதா, கல்வித் தரம் நன்றாக உள்ளதா என்பதை எல்லாம் அறிந்து கொண்டு பிறகு சேர்க்கை பெறுவது நல்லது என்று மத்திய அமைச்சகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. யுரேஷிய கண்டம் என்பது தனியானது. அதற்காக தனியாக விசாவும், அனுமதியும் பெற வேண்டும். எந்த தரகர்கள் மூலமாகவும், பல்கலையில் சேர்க்கை பெற வேண்டாம். யுரேஷிய கண்டத்தில் உள்ள கிர்கிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு 100 இந்திய மாணவர்கள் வன்முறைக்கு ஆளாகி மிகச் சிரமத்திற்குப் பிறகு மீட்கப்பட்டனர். அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய அதிகாரிகள் கூட திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, கல்வி பயில்வதற்கான தகுதியற்ற இடங்களும், கல்வி நிறுவனங்களும் நிறைந்த யுரேஷிய கண்டத்தில் மேற்படிப்பு பயில நினைக்கும் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்