‘பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் தமிழ் புறக்கணிப்பு’
கோவை: “பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் விழா நடத்தக்கூடாது,” என, துணைவேந்தர் திருவாசகம் எச்சரித்துள்ளார். கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது:பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தாய்மொழி தமிழுக்கு முறையான அங்கீகாரம், மரியாதை அளிக்கப்படுவது வெகுவாக குறைந்து வருவது வருத்தத்துக்குரியது. இன்றைய சூழலில் கல்லூரி வளாகங்களில் நல்ல தமிழ் பேசப்படுவதில்லை; நல்ல கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. பல கல்லூரிகளில் தமிழ் மன்றங்கள் இல்லை. வேலை வாய்ப்பு பெற ஆங்கிலம் மிக அவசியம் என்ற கருத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு, ஆங்கிலம் கற்பிப்பதை தலையாய கடமையாக கொண்டுள்ளன கல்லூரிகள். இதனால், மாணவர்கள் மத்தியில் தமிழ் ஆர்வம் ஏற்படவில்லை. பாரதியாரின் பெயரில் செயல்படும் ஒரு பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவது வருத்தத்துக்குரிய செய்தி. தமிழ் குடும்பத்தில் இருந்து கல்லூரி வரும் மாணவர்கள் கூட, பகுதி ஒன்று பாடத்திட்டத்தில் தமிழ் படிக்க விருப்பமில்லை; இந்தி அல்லது பிரெஞ்சு படிக்க விரும்புவதாக தெரிவிக்கின்றனர். தாய்மொழி அழியும் போது அந்த சமுதாயமே அழிந்து போகும் என்ற உண்மையை மறந்து வருகின்றனர் மக்கள். இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்மொழியின் மகத்துவத்தை மாணவர்களிடம் உணர்த்த எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி ஆராய, பல்கலை வளாகத்தில் செப்.,23ல் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. இதில் கல்லூரிகளில் உள்ள அனைத்து துறை தமிழ்த்துறை தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தை தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன் நடத்துகிறார். புதிய தமிழ் பாடத்திட்டங்கள் துவக்குவது, தமிழை வளர்க்க கல்லூரிகளில் பல நிகழ்ச்சிகள் நடத்துவது என பல்வேறு விஷயங்கள் கலந்தாய்வு செய்யப்படுகின்றன. தமிழ் கலாச்சாரத்தை மாணவர்களிடையே எடுத்துரைக்க, ‘தமிழ் கலாச்சார விளக்க இளைஞர் விழா’, அக்., மாதம் நடத்தப்படவுள்ளது. மேலும், சில கல்லூரிகள், கலை விழா நடத்த மாணவர்களிடம் பணம் வசூலிப்பதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. அதுபோல் இந்த ஆண்டு ஏதேனும் புகார் கிடைத்தால், கல்லூரி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.