உள்ளூர் செய்திகள்

மானாவாரி நிலத்தை மேம்படுத்த என்.ஏ.டி.பி., திட்டம்

கோவை: தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் மானாவாரி நிலத்தை மானியத்துடன் மேம்படுத்த என்.ஏ.டி.பி., திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை:தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் (என்.ஏ.டி.பி.,) மானாவாரி நில மேலாண்மை மற்றும் பயிர் உற்பத்தி பெருக்கத்துக்காக ஆறாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டம் கோவை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், பெரம்பலூர், திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களில், 40 வட்டாரங்களில் ரூ.9.96 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மானாவாரி நிலங்களில் பெய்யும் மழைநீர் வீணாவதை தடுக்க வயலோரங்களில் நீர்ப்பிடிப்பு பகுதி, வறட்சி காலங்களில் பயிர்களை காப்பாற்றபண்ணைக்குட்டைகள் அமைக்கப்படுகின்றன. மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் தெளிப்பு நீர்பாசனக் கருவிகள் 90 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் கம்பு, சோளம், திணை, வரகு, கேழ்வரகு, பனிவரகு, குதிரைவாலி, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கான உயர் விளைச்சல் ரகம் அல்லது ஒட்டு ரக விதைகள், விதைநேர்த்தி, உயிர் உரங்கள், நுண்ணுயிர் பூஞ்சாணக்கொல்லிகள், நுண்ணூட்டச்சத்துக்கள் போன்றவையும், ஹெக்டேருக்கு   2,500 ரூபாயும் மானியமாக வேளாண்மைத் துறையால் வழங்கப்பட்டு வருகின்றன. ஆழ உழுவதற்காக உளிக்கலப்பை, விதைக்கும் கருவி, களையெடுக்கும் கருவி, அறுவடை இயந்திரம், தானியம் சுத்தப்படுத்தும் இயந்திரம் உள்ளிட்ட கருவிகள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் அக்ரி கிளினிக் வைத்திருப்போர், முன்னோடி உழவர்களுகளுக்கு 50 சதவீத மானியத்தில் அளிக்கப்படுகிறது. இவர்களிடம் இருக்கும் உபகரணங்களை மற்ற விவசாயிகள் வாடகைக்கு எடுத்து பயன்பெற முடியும். இத்திட்டத்தை ஒருங்கிணைத்து அலுவலர் மற்றும் உழவர் பயிற்சிகளையும், தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் வேளாண்மை பல்கலை செய்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்