பழங்குடியினர் கல்வி மேம்பாட்டிற்கென தனி பல்கலைக்கழகம்
ஒட்டு மொத்தமாக உயர்கல்வி சேர்க்கை விகிதம் 11.6 சதவீதமாக உள்ள நிலையில், பழங்குடியின மக்கள் வெறும் 6.6 சதவீதம் மட்டுமே உயர்கல்வி பெறுகின்றனர். இதனால், மத்திய பிரதேசம், ஒரிசா, சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரபிரதேசம், மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குயிடினரது கல்வி மேம்பாட்டை மையமாகக் கொண்டு மத்தியபிரதேச மாநிலம் அமர்கன்தாக் பகுதியில் ‘இந்திராகாந்தி நேஷனல் டிரைபல் யுனிவர்சிட்டி’ துவக்கப்பட்டுள்ளது. “நூறு பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்கள் உட்பட 150 மாணவர்கள் முதலாமாண்டில் சேர்க்கப்படுகின்றனர். சுற்றுலா, அரசியல் அறிவியல், புவியியல், வரலாறு, வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பு வழங்கப்படும்” என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சிங் தெரிவித்தார். பழங்குயிடினரின் கலாச்சாரத்தைம், பாரம்பரியத்தையும் மையமாக வைத்து இந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. போதிய பழங்குடியினரை உள்ளடக்கி நிர்வாகக்குழு, கல்விக்குழு, கல்வி வாரியம், மேலாண்மை வாரியம், நிதிக்குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. தனி கல்விக்குழு அமைக்கப்பட உள்ள நிலையில், இந்த பல்கலைக்கழகத்திற்கு பணாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்கள் பின்பற்றப்பட உள்ளன. மத்திய மனிதவள அமைச்சர் அர்ஜுன் சிங் கடந்த ஏப்ரலில் இப்பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார். வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ள அந்த நிலம் பல்கலைக்கழகத்தின் வசம் இன்னும் வராததால், அமர்க்ன்தாக் பகுதியில் உள்ள மடாலய கட்டடங்கள் வாடகைக்கு பெறப்பட்டுள்ளன. ‘மாநில அரசு விரைவில் நிலத்தை வழங்கும் என நம்புகிறேன். பழங்குடியினரின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம், மொழி, மருத்துவ முறை, வனத்துடன் இயைந்த பொருளாதார செயல்முறைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். போதிய ஆசிரியர்கள் கிடைத்தபிறகு இந்த ஆய்வு துவக்கப்படும்‘என்று துணைவேந்தர் சிங் மேலும் தெரிவித்தார்.