பிரிட்டனில் முதல் இந்து பள்ளி திறப்பு
லண்டன்: பிரிட்டன் அரசின் நிதியுதவியுடன் இயங்கும் முதல் இந்து பள்ளி லண்டனில் திறக்கப்பட்டது. லண்டனின் ஹாரோ பகுதியில் செயல்படும், ‘கிருஷ்ணா - அவந்தி’ என்ற இந்து பள்ளியில், யோகா, தியானம், வழிபாடு மற்றும் பாடங்கள் போன்றவை போதிக்கப்படும். முதல்கட்டமாக நான்கு மற்றும் ஐந்து வயதுக் குழந்தைகள் 30 பேர் பள்ளியில் சேர்க்கப்படுவர். 2014ம் ஆண்டுக்குள் பிரிட்டனில் 236 இடங்களில் இதுபோன்ற பள்ளிகள் துவக்கப்படும். பிரிட்டனில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வசிக்கின்றனர். அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவே இந்த பள்ளிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள மொத்த பள்ளிகளில், 587 செகண்டரி பள்ளிகளும், 6,253 ஆரம்ப பள்ளிகளும் மதம் சார்ந்த பள்ளிகளும் அடங்கும். அதிலும், பெரும்பாலானவை கிறிஸ்தவ மதத்தினரால் நடத்தப்படும் பள்ளிகள். இதுதவிர முஸ்லிம்கள் மற்றும் யூதர்களால் நடத்தப்படும் பள்ளிகளும் உள்ளன. புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்து பள்ளியில் அடுத்த ஆண்டுக்குள் பல வசதிகள் ஏற்படுத்தப்படும் என, பள்ளியின் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.