கல்வித்துறையில் தனியார் பங்கேற்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கல்வித் துறையில் தனியார் பங்கேற்பை உருவாக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவை கைவிட வேண்டும். இந்த முடிவின்படி, கல்வி உரிமை சட்டத்தின் மூலம் துவக்கப் பள்ளிகள் முதல் நடுநிலைப் பள்ளிகள் வரை பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது. இதில் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த முடிவுக்கு அனைத்து ஆசிரிய அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுசம்பந்தமாக அனைத்து மாநிலங்களிலும் ஆசிரிய சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. மேலும், பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை தொடர வேண்டும். 6வது ஊதிய குழு பாதிப்புகளை முழுமையாக நீக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு ஜனவரி 28ம் தேதி காலை 11 மணிக்கு மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், மாநில தலைவர் காமராஜ் தலைமை வகிக்கிறார். பொது செயலாளர் ரங்கராஜன் வரவேற்கிறார். அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் ஈஸ்வரன், மாநில பொருளாளர் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்கின்றனர் மற்றும் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.