சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை
சென்னை: தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு தகுதி அடைப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் இது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்குப் படிப்புக் கட்டணம் முழுமையாக வழங்கப்படும். பாரமரிப்புக் கட்டணம் மாதம் ஒன்றுக்கு விடுதி மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதமும் விடுதியில் தங்காமல் பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபாய் வீதமும் பத்து மாதங்களுக்கு வழங்கப்படும். இதர கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு படிப்புக் கட்டணம் தலா 20 ஆயிரம் ரூபாய் அல்லது அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணம் இவற்றில் எது குறைவோ அத்தொகையுடன் பாரமரிப்புக் கட்டணமும் வழங்கப்படும். இச்சலுகை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெறுவோர் எண்ணிக்கையில் 50 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்படும். இத்திட்டப்படி, 1312 சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.