மாநகராட்சி பள்ளி மாணவிகள் வடமாநிலங்களுக்கு சுற்றுலா
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து, 10ம் வகுப்பில் பள்ளி வாரியாக முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் வடமாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அனுப்பி வைக்கப்படுவர் என கடந்த பட்ஜெட்டில் மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளிகள் வாரியாக முதலிடம் பெற்ற 20 மாணவிகள் மற்றும் ஆறு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 26 பேரும் செப். 24ம் தேதி மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றுலாவிற்கு வழியனுப்பும் விழா நடந்தது. விழாவில், மேயர் சுப்ரமணியன் பேசியபோது, வரலாற்று சிறப்புமிக்க இடங்களை மாணவர்கள் பார்வையிட உள்ளனர். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மூன்றரை லட்ச ரூபாய் செலவில் கல்விச்சுற்றுலாவை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது,” என்றார். ‘கிராண்ட் டிரங்க்’ எக்ஸ்பிரஸ் ரயிலில் சுற்றுலாவை துவக்கியுள்ள மாணவர்கள், அடுத்த மாதம் 7ம் தேதி ஊர் திரும்புவர். அவர்களுடன் நான்கு ஆசிரியர்கள் மற்றும் ஒரு வழிகாட்டி (கைடு) சென்றுள்ளனர்.