பூமியை போட்டோ எடுத்தது சந்திரயான் கேமரா
சென்னை: சந்திரயான்-1 செயற்கைக்கோளில் உள்ள ‘டெரைன் மேப்பிங் கேமரா’ இயக்கப்பட்டு, 70 ஆயிரம் கி.மீ., தொலைவிலிருந்து பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. சந்திரயான் செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., - சி 11 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து கடந்த மாதம் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றவிடப்பட்ட சந்திரயான் செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை உயரம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது இரண்டு லட்சத்து 67 ஆயிரம் கி.மீ., மற்றும் 465 கி.மீ., தொலைவிலான சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. இந்த சுற்றுப்பாதையில் சந்திரயான் செயற்கைக்கோள் பூமியை சுற்றிவர ஆறு நாட்கள் ஆகும். சந்திரயான் செயற்கைக்கோளில் மொத்தம் 11 அறிவியல் கருவிகள் உள்ளன. செயற்கைக்கோளில் உள்ள ‘டெரைன் மேப்பிங் கேமரா’ கடந்த மாதம் 29ம் தேதி பெங்களூரில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் அண்டு கமாண்ட் நெட்வொர்க் மையத்திலிருந்து இயக்கப்பட்டது. வெகு தொலைவில் சுற்றிவரும் சந்திரயான் செயற்கைக்கோளில் உள்ள இந்த கேமரா பூமியை இரண்டு புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. செயற்கைக்கோள் பூமியிலிருந்து 9,000 கி.மீ., தொலைவில் சுற்றிவந்தபோது, ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரை பகுதியை, கடந்த 29ம் தேதி காலை 8 மணிக்கு முதலாவது புகைப்படத்தை எடுத்துள்ளது. பூமியிலிருந்து 70 ஆயிரம் கி.மீ., தொலைவில் சுற்றிவந்தபோது, ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரை பகுதியை, கடந்த 29ம் தேதி மதியம் 12.30 மணிக்கு இரண்டாவது புகைப்படத்தை எடுத்துள்ளது. இந்த இரண்டு புகைப்படங்களும், பெங்களூருவிற்கு அருகிலுள்ள பைலாலு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தால் பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதன் செயல்பாடுகள் அனைத்தும் திருப்திகரமாக இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. செயற்கைக்கோளில் சுற்றுப்பாதையின் உயரம் மேலும் ஒரு முறை உயர்த்தப்பட்டு, சந்திரனின் சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.