உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்

புதுச்சேரி: "கல்லூரி மாணவர்கள் படிப்போடு நின்று விடாமல், கலை, விளையாட்டுகளிலும் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்&' என, புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி சேர்மன் ஜெயபால் பேசினார். புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியின் கணிப்பொறி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அகில இந்திய அளவில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையே தொழில்நுட்பப் போட்டி நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான, மூன்று நாள் தொழில் நுட்ப போட்டிகள் ஐகான்-2013 என்ற தலைப்பில் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று துவங்கியது. கல்லூரி முதல்வர் கோவிந்தராஜூலு தலைமை தாங்கினார். துறைத் தலைவர் லோகநாதன் வரவேற்றார். மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அமுதன் நோக்கவுரையாற்றினார். விழா மலரை வெளியிட்டு, கல்லூரி சேர்மன் ஜெயபால் பேசுகையில், கல்லூரி மாணவர்கள் படிப்போடு நின்று விடாமல் கலை, விளையாட்டுகளிலும் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார். நிகழ்ச்சியில், புதுச்சேரி எஸ்.பி.ஐ., டெக்னாலஜி இந்தியா நிறுவன தகவல் தொழில்நுட்ப துணைத் தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 8ம் தேதி வரை நடக்கும் தொழில்நுட்ப போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். கணிப்பொறி, இணையதளம், கணிப்பொறி புதிர் தொடர்பாக போட்டிகள் நடத்தப்பட்டு, சிறந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாணவர் மன்ற செயலாளர் மதுசூதனன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்