இஸ்ரோவில் பணிபுரிய போதிய விஞ்ஞானிகள் கிடைக்கவில்லை!
இது குறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியதாவது:தற்போதும் அரசாங்க அமைப்புகளுக்கு திறமையான மனித வளத்தை பெறுவது கடினமான விஷயமாக உள்ளது. சந்திரயான் திட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ள போதும், இஸ்ரோவில் பணிபுரிய போதிய விஞ்ஞானிகள் கிடைப்பதில்லை. அறிவியல் வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான ஊதிய விகிதத்தை கவர்ச்சிகரமாக மாற்ற வேண்டும். இஸ்ரோவின் ஐ.ஐ.எஸ்.டி., கல்வி நிறுவனம் இப்பிரச்னைக்கு தீர்வு காண முயல்கிறது. முதலாம் ஆண்டு முடிவடைந்து, இரண்டாவது பேட்ச் மாணவர்கள் இங்கு சேர்ந்துள்ளனர். அடுத்த கல்வியாண்டிலிருந்து சொந்த கட்டடத்தில் இக்கல்வி நிறுவனம் இயங்கவுள்ளது. மத்திய அரசு நடப்பாண்டில் இஸ்ரோவிற்கு 4,000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. மிகவும் கடினமான காலங்களிலும் மத்திய அரசு இஸ்ரோவிற்கு போதிய நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது என்றார் மாதவன் நாயர். சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், சந்திரயான் திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி கழகத்தில் பணிபுரியும் இந்திய விஞ்ஞானிகள் தாய்நாடு திரும்ப விரும்புகின்றனர். இஸ்ரோவில் உள்ள வாய்ப்புகள் குறித்து என்னிடம் கேட்டு வருகின்றனர். வெளிநாடுகளின் விண்வெளி அறிஞர்களும் இந்திய விண்வெளி திட்டங்களில் சேர்ந்து பணிபுரிய விரும்புகின்றனர் என்றார்.