மதிப்பெண் குவிக்க மெட்ரிக் மாணவர்களுக்கு ஆலோசனை
கோவை: ‘தினமலர்’ நாளிதழ், சென்னை ‘எஸ்.ஆர்.எம்., பல்கலை’ இணைந்து நடத்தும் ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி, பீளமேடு சி.ஐ.டி., கல்லூரி கலையரங்கில் நடந்தது. மெட்ரிக் மாணவர்களுக்கு நடந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கூறிய அறிவுரை: இயற்பியல் - (சவுடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மீனலோசனி) : இயற்பியல், வேதியியல் ஆகிய இரண்டு பாடங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து தேர்வுக்கு தயார் ஆக வேண்டும். இயற்பியல் என்றால் கடினமான பாடம் என்ற எண்ணத்தை களைந்தால் எளிதாக படித்து விடலாம். எழுதிய விடையை மாற்ற விரும்பினால் அழித்து விட்டு வேறு எழுத வேண்டும். முக்கிய பகுதிகளை தனியாக எடுத்துக்காட்ட ‘ஜெல் பேனா’ பயன்படுத்தலாம். பெரிய விடைகளை உப தலைப்புகள் கொடுத்து சிறிய பாராக்கள் ஆக பிரிக்கலாம். அலகுகளை தனி சார்ட் பேப்பரில் எழுதி படிக்கும் அறையில் சுவற்றில் தொங்க விட்டு அடிக்கடி படித்தால் நினைவில் நிற்கும். விரிவான விளக்கம் தேவைப்படும் விடைகளை தகுந்த படங்கள் வரைந்து பாகங்கள் குறிப்பிட மறக்கக் கூடாது. முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களில் முக்கிய கேள்விகளை படிக்க வேண்டும். தமிழ் - (சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி ஆசிரியை அனுராதா) : எளிய பாடம் என்பதால் இத்தேர்வில் மதிப்பெண்களை அள்ளலாம். அனைத்து சிறு கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். இரண்டு, மூன்று வரிகளில் விடையளிக்க வேண்டும். முதல் 3,4 பாடங்களில் அனைத்து கேள்விகளையும் படித்திருந்தால் அதில் குறைந்தது ஒரு கேள்வி கேட்கப்படுவது உறுதி. விடையை தேர்வு செய்து எழுதும் பிரிவில் நான்கு மதிப்பெண்களையும் எளிதாக பெற முடியும். வார்த்தை அமைத்து எழுத வேண்டிய கேள்விகளுக்கு சொந்த கற்பனையும் நடையும் தேவை. இரண்டாவது தாளில் முதல் மூன்று பாடங்களில் இருந்து கட்டாயம் கேள்விகள் வரும். அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தால் மதிப்பெண்களை இழக்க வேண்டியது வரும். பொருள் உரையில் கண்டிப்பாக தலைப்பு தேவை. இப்பிரிவில் முழுமையாக 10 மதிப்பெண்ணும் பெற வாய்ப்பு உள்ளது. கடிதம் எழுதும் கேள்வியில் அனுப்புனர், பெறுனர், தேதி, இடம் ஆகியவற்றை சரியாக எழுதினால் தனித்தனி மதிப்பெண் உண்டு. கடிதத்தின் செய்திக்கு(பாடி) 4 அல்லது 5 மதிப்பெண் கிடைக்கும். செய்யுளை ஐந்து முறையாவது படித்து பார்க்க வேண்டும். அதே வரிகளை எழுத கூடாது. இப்பகுதிக்கு 10 மதிப்பெண்கள் உண்டு. சுருக்கி எழுதும் பகுதியில் பாராவை நன்கு படித்து 120 வார்த்தைகளை 40 வார்த்தைகளாக சுருக்க வேண்டும். இலக்கணத்துக்கு 30 மதிப்பெண். வெண்பா, ஆசிரியப்பா இரண்டில் ஒன்றுக்கு இரண்டு மதிப்பெண் கிடைக்கும். ஆங்கிலம் - (சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி ஆசிரியை ஸ்ரீவித்யா): முதல் தாளில் முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிட வேண்டும். வளவளவென்று எழுத கூடாது. அனைத்து பாடங்களையும் நன்கு படிக்க வேண்டும். வினா எண்களை சரியாக எழுத வேண்டும். ஒவ்வொரு பாராக்கள் இடையேயும் தொடர்ச்சி சரியாக இருக்க வேண்டும்.பாராக்களில் நேரடி பேச்சுக்களை பயன்படுத்தக் கூடாது. கடிதம் எழுதும் கேள்விக்கு 10 மதிப்பெண். 15 நிமிடங்கள் செலவிட்டால் முழு மதிப்பெண்ணையும் பெற்று விடலாம். கடித முகவரியில் தேர்வு பதிவு எண்ணை எழுதி விடக் கூடாது. ‘எக்ஸ்’ அல்லது ‘ஒய்’ என எழுதலாம். விடைகளை மீண்டும் மீண்டும் அழுத்தி எழுதக் கூடாது. எழுத்துப் பிழை இருந்தால் மதிப்பெண் குறையும். வினா எண்களை மாற்றி எழுத கூடாது. இறுதி 10 நிமிடத்தில் எழுதியவற்றை சரிபார்க்க வேண்டும். கணிதம் -(சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி ஆசிரியை சித்ரா): சூத்திரங்கள் தேவைப்படும் கணக்குகளுக்கு விரிவாக எழுதினால் சிறப்பு மதிப்பெண் கிடைக்கும். அலகுகளை எழுத மறக்க கூடாது. கணக்கு ஸ்டெப்சுக்கு தனி மதிப்பெண் உண்டு. சூத்திரங்களை தனியாக ஒரு சார்ட் பேப்பரில் எழுதி தினமும் இரண்டு முறை காணாமல் படித்து வந்தால் தேர்வில் மறக்காது. வேதியியல் - (சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி ஆசிரியை உஷாராணி):சமன்பாடுகளை மீண்டும் மீண்டும் எழுதி படிக்க வேண்டும். மாதிரி கேள்வித் தாள்களில் உள்ள கேள்விகளுக்கு விடையளித்து பழக வேண்டும். ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் 8,9,19 ஆகிய பாடங்களில் ஒரு வரி கூட விடாமல் படிக்க வேண்டும். 5,7,8,9 பாடங்களில் உள்ள சமன்பாடுகளை படிக்க வேண்டும். பார்முலாக்களை மனப்பாடம் செய்ய வேண்டும். படங்களை வரைந்து பாகங்களை சரியாக குறிக்க வேண்டும். விரிவான விடைகளுக்கு உபதலைப்புகள் அளித்து எழுத வேண்டும். உயிரியல் - (சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி ஆசிரியை பத்மா):உயிரியல் பாடம் கடினம் என பல மாணவர்கள் நினைப்பது தவறு. அதிக மதிப்பெண் பெற நினைப்பவர்கள் இந்த பாடத்தை நன்கு படிக்க வேண்டும். உயிர் தாவரவியல் மற்றும் உயிர் உயிரியல் பிரிவுகளில் உள்ள நான்கு கேள்விகளை கண்டிப்பாக எழுத வேண்டும். புத்தகத்தை முழுவதுமாக படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். விடை எண்களை அதற்கான வரிசைப்படி எழுத வேண்டும். படங்கள் வரைய மைக்ரோடிப் பேனாக்கள் பயன்படுத்துவது நல்லது. விடைகளை தேவைப்படும் இடங்களில் கட்டம் போட்டு காண்பிக்க வேண்டும். இரண்டு மதிப்பெண் கேள்விகளுக்கு சுருக்கமாக பதில் அளிக்க வேண்டும். அதிகமாக எழுதினால் கூடுதல் மார்க் கிடைக்காது. வரலாறு - (சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி ஆசிரியை பானுமதி): வினாத்தாளின் ஏ,பி பிரிவுகளுக்கு அதிக கவனம் செலுத்தினால் 20 மதிப்பெண்களை எளிதாக பெறலாம். உலக வரைபடத்தில் திசைகளை சரியாக எழுத வேண்டும். கேள்விகளை கவனமாக திரும்ப திரும்ப படித்து பார்க்க வேண்டும். விடைகள் கையெழுத்துப் பிழைகள் இல்லாமல் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். வினாத்தாளில் பெயர் எழுதக் கூடாது. புவியியல் - (சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி ஆசிரியை கலாவதி): வினாத்தாளின் முதல் பகுதியில் தலா ஒரு மதிப்பெண் கொண்ட 25 கேள்விகள் உண்டு. அனைத்தும் கட்டாயம் எழுத வேண்டும். விடைகளை பொருத்திப் பார்த்து எழுதும் பகுதிக்கு அதிக மதிப்பெண் உண்டு. புவியியல் பாடத்தில் மட்டுமே வரைபடம் சகிதம் கட்டுரை எழுத வேண்டும். வரைபட திசைகள், விவசாய பகுதிகள், ரயில், ரோடு பகுதிகளை குறிக்க வெவ்வேறு கலர்கள் கொடுக்க வேண்டும்.