தாய்மொழியுடன் ஆங்கில அறிவும் முக்கியம்: பொன்முடி
அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஆங்கில ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்த உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பேசியதாவது: காலத்திற்கேற்ற வகையில் கற்பிக்கும் முறையில் நவீன மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இலக்கணப் பிழை இல்லாமல் ஆங்கிலம் பேசுகின்றனர். தகவல் தொடர்புக்கும் வர்த்தக தொடர்புக்கும் ஆங்கிலம் அவசியமானது. தகவல் தொடர்புத் துறையில் புரட்சி நடைபெறும் இந்த காலத்தில் ஆங்கிலம் படிப்பது முக்கியமானது. சிறந்த மாணவர்கள் உருவாவதற்கு தாய்மொழிக் கல்வி அவசியமானது. எனவே கல்வி என்பது அவரவர்களின் தாய்மொழியில் அமைய வேண்டும்அதேசமயம் நாங்கள் ஆங்கிலத்துக்கு எதிரானவர்கள் இல்லை. மொழி என்ற அடிப்படையில் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளலாம்தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த ஏழை மாணவர்களாகவே உள்ளனர். எனவே அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். ஆங்கிலத்தை மனப்பாடம் செய்யக் கற்றுக் கொடுக்காமல் இயல்பாக பேசக் கற்றுக்கொடுக்க வேண்டும். இந்தப் பயிற்சி ஆசிரியர்களுக்கும், அதன் மூலம் மாணவர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்றார் பொன்முடிஇந்த பயிற்சி முகாமில் வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் மூலம் 20 கல்லூரி ஆசிரியர்களுக்கு 3 வாரம் ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் பிறகு இவர்கள், மாநிலம் முழுவதும் உள்ள 67 அரசுக் கல்லூரி ஆங்கில ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள். கல்லூரிக் கல்வி இயக்குநர் நளினி ரவீந்திரன், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பிரடெரிக் ஜே. கப்லான், ராகினி குப்தா உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.