உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் பாடத்திட்டத்தில் இந்திய வரலாறு சேர்ப்பு

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் கண்டு வரும் வளர்ச்சி பல நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நம்மை வெகுவாகக் கவரும் சிங்கப்பூரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய பொருளாதார வளர்ச்சியால் கவரப்பட்ட சிங்கப்பூர் தனது பாடத்திட்டதில் இந்தியா பற்றிய பாடங்களை சமீபத்தில் சேர்த்துள்ளது. இதில் இந்தியாவின் வரலாறு, கலாசாரம் மற்றும் அரசியல் ஆகியவை பற்றிய பாடங்கள் இடம் பெறுகின்றன. புகழ் பெற்ற விக்டோரியா ஜூனியர் காலேஜ் மாணவர்கள் 2009ல் இந்தியா பற்றிய பாடத்தில் தேர்வு எழுத உள்ளனர். உலகின் முன்னணி வளர்ச்சி நாடுகளில் ஒன்றான இந்தியா பற்றிய அடிப்படைகளை எங்கள் மாணவர்கள் படிக்க வேண்டியது அவசியம் என இக் கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார். அடுத்த பொருளாதார ஜாம்பவானாக இந்தியாவை சிங்கப்பூர் பார்க்கிறது. இதனால் இந்தியா பற்றி படிக்கவிருக்கும் எங்கள் மாணவர்கள் எதிர்காலத்தில் இந்தியாவுடன் வியாபாரம் செய்து கொள்ளும் நம்பிக்கையை இந்த பாடங்கள் தந்திடும் என நம்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். சிங்கப்பூரின் புகழ் பெற்ற மற்றொரு கல்லூரியான ராபில்ஸ் ஜூனியர் காலேஜில் இந்தியா பற்றிய படிப்புகள் ஏற்கனவே இருந்தாலும் விக்டோரியா காலேஜ் தரவிருக்கும் படிப்பானது 4 ஆண்டு படிப்பாகும். ஏற்கனவே சிங்கப்பூர் கல்வி முறையில் சீனா பற்றிய பாடங்கள் படிக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் இந்த அடிப்படைப் படிப்புகளைப் படித்துவிட்டு அடுத்ததாக சீனா, இந்தியா போன்ற நாடுகளில் மேற்படிப்பை சிங்கப்பூர் மாணவர்கள் மேற்கொள்ள இது உதவுவதாக சிங்கப்பூர் அரசு நம்புகிறது. சமீப காலத்தில் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வாணிப மற்றும் பிற உறவுகள் அதிகரித்துக் கொண்டே வருவதும் இந்த படிப்பு அறிமுகமானதற்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது. இப்படிப்புகளை திறம்பட நடத்துவதற்காக சிங்கப்பூர் தேசிய கல்வி நிறுவனம் ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சியை நடத்தத் துவங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பின் ஒரு பகுதியாக மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா வந்து செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்