பல்கலைக்கழகங்களில் சினிமாத் துறை உருவாக்கப்பட வேண்டும்
சென்னை: "பல்கலைக்கழகங்களில் சினிமாவுக்கென தனியாக துறைகள் இல்லாதது வருத்தமளிக்கிறது" என்று தியோடர் பாஸ்கரன் பேசினார். சென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. "உலகப்போர்களுக்கிடையே சென்னை நகரம்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இக் கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த பேராசிரியர்கள், வரலாற்று ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள். தமிழ் சினிமாவில் உலகப்போர்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் பேசுகையில், "தமிழ் நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் இருந்தும், சினிமாவுக்கென தனியாக துறைகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. இத்தனைக்கும் தமிழ் சினிமாவோடு தொடர்புடையவர்கள் தான் தமிழகத்தை தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறார்கள். இரண்டாம் உலகப்போரின் நிலவரம் குறித்து எவரும் பெரிய அளவில் திரைப்படம் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது" என்றார். மேலும் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. நேற்றும், இன்றும் நடந்த கருத்தரங்கில் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.