மாவட்ட அளவிலான அறிவியல் புத்தாக்க கண்காட்சி
திண்டிவனம்: அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் திண்டிவனம் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் புத்தாக்க கண்காட்சி மான்போர்ட் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. 2013-14ம் கல்வி ஆண்டிற்கான புத்தாக்க (இன்ஸ்பயர்) அறிவியல் ஆய்வு விருதுக்கான பள்ளியை தேர்வு செய்ய திண்டிவனம் கல்வி மாவட்டத்தின் திண்டிவனம், வானூர், செஞ்சி, திருக்கோவிலூர் வட்டங்களில் இருந்து 348 பள்ளிகள் கலந்து கொண்ட அறிவியல் கண்காட்சி நேற்று திண்டிவனம் மான்போர்ட் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் பாஸ்கரன் கண்காட்சியை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் அருட்சகோதரர் ஜூலியன், பள்ளி துணை ஆய்வர் ராமகிருஷ்ணன், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், 700 ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் கண்காட்சியை கண்டுகளித்தனர். இந்த கண்காட்சியில் இருந்து தேர்வு செய்யப்படும் 80 பள்ளிகள் மாநில அளவில் நடக்க உள்ள கண்காட்சியில் இடம்பெற உள்ளன.