புத்தகங்களை வைக்க இடவசதி இல்லா நூலகங்கள்
காரைக்குடி: நூலகங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக புத்தகம் வழங்காமல், தற்போது ஒரே நேரத்தில் மூன்றாண்டுக்குரிய புத்தகம் வழங்கப்படுகிறது. இவற்றை அடுக்கி வைக்க போதிய இடவசதி இல்லாததால், நூலகர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நூலகங்களுக்கு, நூலக நிதியிலிருந்து, புத்தகங்கள் பதிப்பகங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். 2010ம் ஆண்டு முதல் 2013 வரை நூல்கள் வாங்கப்படவில்லை. இது குறித்து நூலகத்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. தற்போது மூன்று ஆண்டுகளுக்கு உரிய நூல்கள், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து, நூலக நிதியில் வாங்கி கொடுக்கப்படுகின்றன. மாவட்ட மைய நூலகம், கிளை நூலகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு ஆயிரம் நூல்கள், ஊர்புற நூலகங்களுக்கு ஆண்டுக்கு 500 நூல்கள், என்ற வீதத்தில் வழங்கப்படுகின்றன. மறு பதிப்பு இல்லாதவை, பைண்டிங் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. புத்தகம் வைக்க இடமில்லாமல், அவை சாக்குகளில் கட்டி வைக்கப்படுகின்றன. நூலகர் கூறும்போது: நூல்களுக்குரிய அடுக்கு வாங்கி கொடுக்காமல், நூல்களை மட்டுமே வழங்குவதால், அவற்றை அப்படியே கட்டி வைக்கும் நிலைக்கு நூலகர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மழை பெய்து வரும் நிலையில், ஒரு சில நூலகங்கள் ஒழுகும் நிலையில் உள்ளன. இதனால், கட்டி வைக்கப்பட்ட நூல்கள் கரையான் அரிக்கும் நிலை உள்ளது, என்றார்.