ஜூடோவில் தடைகளை மீறி சாதிக்கும் மாணவி!
கோவை: பயிற்சிக்கு தேவையான வசதி இருந்தால், ஜூடோவில் சாதிப்பேன், என்று நம்பிக்கையோடு சொல்கிறார், மாணவி பெனிட்டா பியாட்ரஸ். படிப்புக்கும், விளையாட்டுக்கும் வறுமை ஒரு தடையல்ல; சாதிக்கும் ஆற்றல் இருந்தால் போதும் என்று, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் பள்ளி மாணவி பெனிட்டா பியாட்ரஸ். ராமநாதபுரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் இவருக்கு, சமீபகாலமாக ஜூடோவின் மீது ஆர்வம் ஏற்பட்டது. மூன்று மாதங்களில் மேற்கொண்ட தொடர் பயிற்சியால், சமீபத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கோவை கலைமகள் கல்லுாரியில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டியில், முதலிடம் பெற்று சாதித்துள்ளார். சென்னையில் நடத்தப்பட உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற இவரை சந்தித்தோம். அப்போது கூறியதாவது: தொலைக்காட்சியில் பார்க்கும் போது, ஜூடோ விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பங்கஜா மில் மைதானத்தில், பயிற்சியாளர் சில்பாவிடம் பயிற்சி பெற்று வருகிறேன். மைதானம், செம்மண் பூமியாக உள்ளதால், விழும்போது அடிபட வாய்ப்புள்ளது. பல சமயங்களில் அடிபட்ட அனுபவமும் உள்ளது. குடும்பத்தினர், வேண்டாம் என தடுத்தபோதும், விடாப்பிடியாக பயிற்சி மேற்கொண்டதால், மாவட்ட அளவிலான போட்டியில் சாதிக்க முடிந்தது. இதற்கு காரணம் பயிற்சியாளர்தான். முறையான இடவசதி இருந்தால், பல்வேறு போட்டிகளில் சாதிக்க முடியும், என்றார். விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இவ்விளையாட்டுக்கான இடவசதியை, நேரு ஸ்டேடியத்தில் ஏற்படுத்திக் கொடுத்தால், இதில் ஈடுபட்டுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு பயன்தரும்.