வினாத்தாள் குளறுபடியால் தாமதமாக தொடங்கிய தேர்வு
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை கழக இணைப்பு கல்லூரிகளுக்கான தேர்வு வினாத்தாளில் நேற்று நடைபெற வேண்டிய பாட தேர்வுக்குரிய வினாக்களுக்கு பதிலாக வேறு பாட தேர்வின் வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் இரண்டு மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கியது. காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தின் கீழ், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடக்கிறது நேற்று, பி.எஸ்.சி., கணிதத்தில் நியூமெரிக்கல் அனாலசிஸ் பாட தேர்வு நடந்தது. இதற்காக தேர்வு எழுத வழங்கிய வினாத்தாள்களில் நேற்று நடைபெற வேண்டிய தேர்வுக்குரிய கோடு எண், தேர்வின் பெயர் சரியாக அச்சிடப்பட்டிருந்தது.ஆனால் வினாத்தாளில் சில நாட்களுக்கு முன் நடைபெற்று முடிந்த புள்ளியியல் பாடத்திற்குரிய வினாக்கள் இடம் பெற்றிருந்தன. இதை பார்த்த மாணவர்கள் குழப்பமடைந்தனர். சில மாணவர்கள் தேர்வு கண்காணிப்பாளரிடம் வினாக்கள் மாறியது குறித்து கேட்டபோது, தேர்வு கண்காணிப்பாளர்கள், நாங்கள் கணித ஆசிரியர்கள் இல்லை, எனக் கூறி முதன்மை தேர்வு கண்காணிப்பாளரிடம் புகார் செய்தனர். கண்காணிப்பாளர்கள் அழகப்பா பல்கலை தேர்வு துறையை தொடர்பு கொண்டு வினாக்கள் மாறியிருப்பது குறித்து புகார் தெரிவித்தனர். தவற்றை அறிந்த பல்கலை கழகம் சரியான வினாக்கள் அடங்கிய வினாத்தாளை அந்தந்த கல்லூரிகளுக்கு பேக்ஸில் அனுப்பின. அதன் பிறகு அந்த வினாத்தாள்கள் நகல் எடுக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 12 மணிக்குத்தான் மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பித்தனர். கல்லூரி சார்பில் அவர்களுக்கு டீ, வடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகத்திடம் கேட்டபோது: தவறு நடந்தது குறித்து வந்த புகாரின் அடிப்படையில், மாணவர்களுக்கு வேறு வினாத்தாள் நகல் எடுத்து வழங்கப்பட்டது. 10 மணிக்கு தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் 12 மணிக்கு எழுதினர். தவறு குறித்து விசாரித்து வருகிறோம், என்றார்.