உள்ளூர் செய்திகள்

அடிப்படை வசதியற்ற தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட பல அரசு பள்ளிகளில் வகுப்பறை, ஆய்வுக்கூடம், கழிப்பறை உள்ளிட்ட வசதியின்றி மாணவர்கள் தவிக்கின்றனர். மரத்தடியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நிலையும் உள்ளது. எனவே இப்பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிவகாசி தாலுகா அனுப்பங்குளம் அரசு நடுநிலைப்பள்ளி 2010ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே இருந்த நடுநிலைப் பள்ளிக்கான கட்டடத்திலேயே இந்த உயர்நிலைப் பள்ளியும் செயல்படுகிறது. இந்த ஆண்டு இப்பள்ளியில் 250 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கட்டட வசதி இல்லாததால் கிராம மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப கட்டி பயன்படுத்தாமல் மூடியே இருந்த சமூக நலத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் 7 மற்றும் 8ம் வகுப்புகள் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டன. தவிப்பில் மாணவர்கள் இக்கல்வி ஆண்டின் தொடக்கத்தில் சமூகநலத்துறைக்கு புதிதாக வந்த மாவட்ட அலுவலர் "தங்கள் துறைக்கு சொந்தமான கட்டடத்தில் வகுப்புகள் நடத்தக்கூடாது. உடனே காலி செய்து கட்டடத்தை ஒப்படைக்க வேண்டும், என பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினர். இதனை தொடர்ந்து 2 வகுப்பறைகளை காலி செய்து கட்டடத்தை பூட்டி சமூக நலத்துறையிடம் சாவியை ஒப்படைத்தனர். தற்போது ஓராண்டாக இக் கட்டடம் எவ்வித பயன்பாடு இன்றி பூட்டியே உள்ளது. பள்ளி டேபிள், சேர்கள் கூட இன்னமும் அங்கேயே உள்ளன. அவசரம் ஏற்பட்டால் மாணவர்கள் அருகிலுள்ள திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். மாணவிகள் தங்கள் வீட்டிற்கு சென்று இயற்கை உபாதை கழித்து விட்டுதான் பள்ளிக்கு திரும்ப வேண்டும். 2012- 2013ம் ஆண்டில் ரூ.2 லட்சம் செலவில் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் பள்ளிக்கு கழிப்பறை வசதி செய்யப்பட்டது. ஆனால் தண்ணீர் வசதி செய்யாததால் இதுவரை பயன்படுத்தாமல் பூட்டியே உள்ளது. அனுப்பங்குளம் கண்மாய் கரை அருகே உள்ள காலியிடத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு 2012-2013ம் ஆண்டில் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் 2 வகுப்பறைகள் கட்ட ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. விலைவாசி உயர்வால் ஒதுக்கீடு செய்த தொகையில் கட்டடம் கட்டி முடிக்க முடியாது என்பதற்காக கட்டுமான பணியை துவக்க பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை. இதனால் ஒரு கட்டடத்தில் 3 முதல் 4 வகுப்பறைகள் இட நெருக்கடியில் செயல்பட்டு மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். சிவகாசி காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளி 2 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மேல்நிலை கல்வியில் முதல் குரூப், அறிவியல் குரூப் மாணவர்களுக்கு செய்முறை வசதிக்கான அறிவியல் ஆய்வுக்கூடம் இல்லை. எனவே செய்முறை வகுப்பிற்காக சாட்சியாபுரத்தில் அரசு உதவிபெறும் பள்ளி, பெண்கள் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுப்பி பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. சில இடங்களில் மரத்தடியில் பாடம் நடத்தப்படுகிறது. இதுபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தரம் உயர்த்தப்பட்ட பல அரசு பள்ளிகளில் அடிப்படை வசதியின்றி மாணவர்கள் தவிக்கின்றனர். எனவே மாணவர்களுக்கு தரமான கல்வி கற்க போதிய அடிப்படை வசதிகளை செய்திட மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிவகாசி ராமர், "தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு போதிய வகுப்பறை, குடிநீர், ஆய்வகம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்