உள்ளூர் செய்திகள்

இரவல் பணியாளர்களுடன் செயல்படும் நவீன நூலகம்

ஈரோடு: இரவல் பணியாளர்களுடன், ஒன்றரை ஆண்டுகளாக நவீன நூலகம் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு சம்பத் நகரில் நவீன நூலகம், 2013ம் ஆண்டு ஜூனில் செயல்பாட்டுக்கு வந்தது. தினசரி, வார, மாத இதழ்கள், பேப்பர்கள், நாவல்கள், அரசு போட்டி தேர்வு புத்தகங்கள், சிறுவர்-சிறுமியருக்கான புத்தகங்கள், டிஜிட்டல் நூலகம், சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புத்தகங்கள் என, முற்றிலும் விரிவுபடுத்தப்பட்ட புத்தக வசதிகள் உள்ளன. நூற்றுக்கணக்கான வாசகர்கள் தினமும் வந்து செல்கின்றனர். ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக, இந்த நூலகத்துக்கு என, நிரந்தர பணியாளர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. இரவல் பணியாளர்களே வந்து செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து நூலக ஊழியர்கள் கூறியதாவது: இங்கு முதல் நிலை நூலகர் ஒன்று, இரண்டாம் நிலை நூலகர்கள் இரு ஷிப்ட்களுக்கு தலா ஒருவர், மூன்றாம் நிலை நூலகர்கள், ஆறு பேர் தினமும், 10 பேர் பணியில் இருக்க வேண்டியது கட்டாயம். தவிர அலுவலக உதவியாளர் ஒருவர், ரெக்கார்டு கிளார்க் இருவர் உள்ளனர். ஒன்றரை ஆண்டுகளாக இதற்கென தனியே பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. அனைத்து நிலை நூலகர்களும், கூடுதல் பணியாக, இங்கு வந்த செல்ல வேண்டும். இங்கு மூன்று நாட்களும், நியமிக்கப்பட்ட நூலகத்தில், மூன்று நாட்களும் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரு இடங்களிலும் ஏற்படும் "புத்தக இழப்புக்கு நூலகர்களே பொறுப்பேற்க வேண்டும். அதற்கான தொகையை செலுத்த வேண்டும். இதற்கு பஸ் கட்டணம் மட்டுமே வழங்கப்படும். பிற சலுகைகள் ஏதும் கிடையாது. வாரந்தோறும் குறித்த நாளில், கூடுதல் பணியாக நவீன நூலகத்துக்கு வர வேண்டும். அவ்வாறான நாட்களில் விடுப்பு எடுக்க கூடாது என்று, வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். இதேபோல், மாவட்டத்தில் உள்ள, 14 யூனியன்களிலும், முழு நேர நூலகம் செயல்படுகிறது. இவற்றில், மூன்றாம் நிலை நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தினக்கூலி பணியாளர்கள் தலா ஒருவர் வீதம் உள்ளனர். இங்கும் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, ஈரோட்டில் உள்ள நவீன நூலகத்துக்கு, நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். 14 யூனியன்களில் உள்ள முழு நேர நூலகத்துக்கு, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். குறைந்த பட்சம் தினக்கூலி பணியாளர்களையாவது நிரந்தரமாக்க வேண்டும். மேலும், முழு நேர, ஊர்ப்புற நூலகங்களில் மாற்றுத்திறன் கொண்ட ஆண், பெண் நூலகர்கள் பணியாற்றுகின்றனர். மாற்று திறன் நூலகர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நூலகங்களில், அவர்களை பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மாற்று திறன் கொண்ட நூலகர்கள், எளிதில் சென்று வரும் வசதியான நூலகங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்