‘மத்திய அரசால் தமிழக கவிஞர்களுக்கு சிறப்பு’
காந்திகிராமம்: ’திருவள்ளுவர், பாரதியார் தினத்தை நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால் தமிழக கவிஞர்களுக்கு சிறப்பு கிடைத்துள்ளது,’ என காந்திகிராம பல்கலை துணைவேந்தர் நடராஜன் தெரிவித்தார். காந்திகிராம பல்கலை தமிழ்த்துறை ஆய்வகம் சார்பில் பாரதியார் பிறந்த தின கருத்தரங்கம் நடந்தது. மத்திய செம்மொழி தமிழ் நிறுவன புறநிலை வல்லுனர் சீனிச்சாமி துவக்கி வைத்தார்.ஆய்வக ஒருங்கிணைப்பாளர் பிச்சை வரவேற்றார். துணைவேந்தர் பேசியதாவது: பாரதியாரின் கவிதைகள் எளிமையாகவும், இனிமையாகவும் இருப்பதால் குழந்தைகள் எளிதில் கற்று கொள்கின்றனர். திருவள்ளுவர், பாரதியார் தினத்தை நாடு முழுவதும் கல்வி நிலையங்களில் கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ் கவிஞர்களுக்கு முதல்முறையாக இந்த சிறப்பு கிடைத்துள்ளது. இதற்காக மத்தியஅரசை பாராட்ட வேண்டும். தமது எழுச்சியூட்டும் வரிகளால் பெண் விடுதலைக்காக பாரதியார் போராடியுள்ளார். தாய் அன்பு, சிந்தனை ஆகிய பண்புகளில் காந்தியடிகளும், பாரதியாரும் ஒரே கோட்பாடு கொண்டவர்கள். அனைத்து தரப்பினருக்கும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் சக்தி பாரதியாரின் கவிதைகளுக்கு உண்டு,’ என்றார். எட்டையாபுரம் பாரதியார் முற்போக்கு வாலிபர் சங்க செயலர் இளசை மணியன், தமிழ்த்துறை தலைவர் ராசரத்தினம், பேராசிரியர்கள் ஆனந்தகுமார், நாகநந்தினி, முத்தையா கலந்து கொண்டனர்.