யோகாசனப் போட்டிகளில் சாதிக்கும் திருப்பூர் சகோதரிகள்
திருப்பூர்: மாநில மற்றும் தேசிய அளவிலான யோகாசனப் போட்டிகளில், திருப்பூர் சகோதரிகள் இருவர், சாதித்து வருகின்றனர். திருப்பூர் ஏ.பி.எஸ்., அகாடமி பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறார், அனிதா; இவரது சகோதரி ஹேமா, அதே பள்ளியின் 4ம் வகுப்பு மாணவியாவார். இருவரும், கல்வியில் மட்டுமின்றி, யோகாசனத்திலும் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். மாநில, தேசிய அளவிலான பல்வேறு யோகாசன போட்டிகளில் பங்கேற்று, வெற்றிபெற்று, திருப்பூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். கடந்த 2013ல் ஆண்டில் நடந்த மாநில அளவிலான யோகாசனப் போட்டியில், அனிதா 3ம் இடத்தை பெற்றார்; 2014ம் ஆண்டில், இரு போட்டிகளில் முதலிடமும்; ஒரு போட்டியில் 2ம் இடத்தையும் பெற்றார். கடந்த 2013ல், கோவையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், அனிதாவுக்கு முதலிடம் கிடைத்தது. அவரது சகோதரி ஹேமா, நடப்பாண்டில் நடந்த தேசிய யோகா போட்டியில், முதலிடம் பெற்றார். ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும், இவர் முதலிடம் பிடித்தார். மாநில மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றிபெற்று வரும் பள்ளி குழந்தைகளை, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.