உள்ளூர் செய்திகள்

இளைஞர்களுக்கு இலவச தொழில் வாய்ப்பு பயிற்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் நடந்து வருகின்றன. பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு, இலவச தொழில் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. கடந்த இரு மாதங்களாக, இரு ஒன்றியங்களுக்கும் உட்பட்ட, 30 இளைஞர்களுக்கு நான்கு சக்கர வாகனம் இயக்கும் பயிற்சியளிக்கப்பட்டு, ஓட்டுனர் உரிமம், மற்றும் தொழில் ரீதியான ஓட்டுனருக்கான உரிமம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், 30 இளைஞர்கள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். கம்ப்யூட்டர் மூலம் நிறுவன கணக்கு வழக்குகளை பராமரிக்கும் &'டேலி&' பயிற்சி, 60 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது; 30 மகளிருக்கு தையல் கலை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இரு நாட்கள் காளான் வளர்ப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இவற்றின் தொடர்ச்சியாக, நேற்று முதல் பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட, கிராமப்புற மகளிருக்கு இலவச தையல் பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் பெண்களுக்கான உடை தைக்க விரிவாக பயிற்சியளிக்கப்படுகிறது. மேலும், 18 முதல் 35 வயதுள்ளவர்களுக்கு, சமையல் கலை, பரிமாறுதல், விசேஷங்களுக்கு சமையல் செய்து அளித்தல் ஆகியவை குறித்து இலவச கேட்டரிங் பயிற்சியளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். அதற்கு எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். வயது, 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். 72 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு, ஒவ்வொரு நாளும், 100 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இவற்றில் பங்கேற்க விரும்புவோர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்டவர்கள், 97916 44874 என்ற எண்ணிலும், வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்டவர்கள், 74027 14756 என்ற எண்ணிலும், அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்