பெரியார் பல்கலையில் கணித்தமிழ் பேரவை துவக்கம்
ஓமலூர்: சேலம், பெரியார் பல்கலையில் கணித்தமிழ் பேரவை துவக்கப்பட்டது. பழமையான கல்வெட்டு தகவல், ஓவியம் மற்றும் ஓலைச்சுவடிகளில் உள்ள தகவல்களை, டிஜிட்டல் முறையில் சேகரித்து, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், சேலம் பெரியார் பல்கலையில், கணித்தமிழ்ப் பேரவையை, வீடியோ கான்பரன்சிங் மூலம், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குனர் மற்றும் நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் துவக்கி வைத்தார். பெரியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். பேரவையை துவக்கி வைத்து, நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் பேசியதாவது: மதுரையை தொடர்ந்து, சேலத்தில் துவக்கப்பட்ட கணித்தமிழ் பேரவையின் முக்கிய நோக்கம், அடுத்த தலைமுறையினருக்கு எவ்வாறு தமிழை கொண்டு சேர்ப்பது என்பது தான். தொழில்நுடப் ரீதியாக எவ்வாறு கொண்டு செல்வது மற்றும் பாதுகாப்பது குறித்தும், தமிழ்மென்பொருள் உருவாக்கம் மூலம் டிஜிட்டல் முறையில் பண்டைய கால கல்வெட்டு தகவல், ஓவியம், ஓலைச் சுவடி தகவல் ஆகியவை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கணித்தமிழ்ப் பேரவை பணி நடக்கும். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான கட்டுரை, டிஜிட்டல் முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது. அடுத்த, ஓராண்டுக்குள், ஒரு லட்சம் கட்டுரை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வம் மிகுந்த இறுதி பட்டபடிப்ப மாணவ,மாணவர்களை தேர்வு செய்து கணித்தமிழ் திட்டங்களை தயார் செய்ய வழிகாட்ட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். விழுப்புரம் சப்-கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், பட்டி, தொட்டியெங்கும் உள்ள தமிழர்கள் கைகளுக்கு, தமிழை கொண்டு சேர்க்கும் பணி, தற்போது மாணவ, மாணவியர் கையில் உள்ளது. தமிழ் மென்பொருள், செயலிகள் ஆகியவைகளை புதிது, புதிதாக உருவாக்கி, தமிழை வளர்க்க வேண்டும், என்றார்.