உள்ளூர் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு துவக்கம்

கோவை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நேற்று துவங்கியது. கோவை மாவட்டத்தில், முதல் நாள் கலந்தாய்வில், 37 ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் பெற்றனர். கோவை மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ராஜவீதியிலுள்ள அரசு துணி வணிக பள்ளியில் நேற்று காலை துவங்கியது. மாறுதல் கோரி விண்ணப்பித்ததில், 247 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதில், 43 காலி பணியிடங்களில், 37 இடத்துக்கு மாறுதல் ஆணை பெற்றனர். தொடர்ந்து, இன்று மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடக்கவுள்ளது. மேலும், கலந்தாய்வில் பங்கேற்க வந்த, 17 ஆசிரியர்கள் ஓராண்டு பணிக்காலம் முடியவில்லை என்பதால், அனுமதி மறுக்கப்பட்டது. உபரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுக்காததால் ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர். கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் கூறுகையில், விதி முறைகளின்படி கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. உபரி ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணிக்கலாம் இல்லாமல் பங்கேற்க இயலாது, என்றார். தமிழ்நாடு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில், உபரி ஆசிரியர்கள் என்பவர்கள் கட்டாயத்தின்படி, இடமாற்றம் செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு, ஓராண்டு விதிமுறை என்பது சரியல்ல. ஒரு சில மாவட்டங்களில் உபரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கோவையில் புறக்கணிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இனிவரும் காலங்களில், உபரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்