மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ’ஸ்மார்ட் கிளாஸ்’ துவக்கம்
ஊட்டி: மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கிளாஸ், ஊட்டியில் துவங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி வண்ணாரப்பேட்டை, நகராட்சி கட்டடத்தில், ஊட்டி நகர ரோட்டரி கிளப் சார்பில், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், ஸ்மார்ட் கிளாஸ் துவங்கியுள்ளனர். ரோட்டரி கிளப் தலைவர் டாக்டர் முருகேசன் கூறுகையில், ஸ்மார்ட் போர்டு வசதியால், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், பாடங்களை புரிந்து கொள்வது எளிதாகிறது; பாடங்களை ஆழமாக புரிந்து கொள்கின்றனர். இன்டர்நெட் இணைப்பும் உள்ளதால், சர்வதேச அளவில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்காக போதிக்கப்படும் பாடங்களை, இவர்களுக்கும் கற்பிக்க முடியும், என்றார். ரோட்டரி கிளப் நிர்வாகி செந்தில் குமார் கூறுகையில், இரண்டு லட்சம் ரூபாய் செலவில், ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், மன வளர்ச்சி குன்றிய, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான முதல் ஸ்மார்ட் கிளாஸ் இதுதான், என்றார்.