உள்ளூர் செய்திகள்

அண்ணாமலை பல்கலை முன்னாள் மாணவி கைது

சிதம்பரம்: பல்கலைக்கழக மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்ட வழக்கில், இரு ஆண்டுகளாக, டிமிக்கி கொடுத்து வந்த முன்னாள் மாணவியை, போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், பின்னலூர் அடுத்த வீமனூரைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி, 22; அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 2010 - 14ம் ஆண்டுகளில், பி.எஸ்சி., வேளாண்மை படித்தார். அப்போது, பல்கலைக்கழக மாணவர்களை அடிக்கடி போராட்டத்திற்கு தூண்டியதாக, நிர்வாகம் பலமுறை அவரை கண்டித்தும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். விசாரணையில், மாணவி வளர்மதி, மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்தின் துணை அமைப்பு ஒன்றை சேர்ந்தவர் என, தெரிய வந்தது. அதனால்,அண்ணாமலை பல்கலைக்கழக போலீசார், 2014ல், அந்த மாணவி மீது வழக்கு பதிந்தனர். அப்போதிலிருந்தே வளர்மதி தலைமறைவாக இருந்து வந்தார். 2015ல் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற வளர்மதியை கைது செய்ய, சிதம்பரம் போலீசார் திட்டமிட்டனர். ஆனால், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பிவிட்டார். இந்நிலையில், மதுரை தல்லாக்குளம் பகுதியில் பதுங்கியிருந்த வளர்மதியை, கடலூர் மாவட்ட சிறப்பு படை போலீசார் கைது செய்து, சிதம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரணை செய்தமாஜிஸ்திரேட் ஆயிஷா பேகம், முன்னாள் மாணவி வளர்மதியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவின்படி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்