உயர்கல்வியை தக்கவைத்த தர்மபுரி; நிர்வாகிகள் மகிழ்ச்சி
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மீண்டும் உயர் கல்வித் துறை அமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொண்டது. கடந்த, 2011 முதல், 2016 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில், பலமுறை அமைச்சர்கள் மாற்றப்பட்ட போதும், தொடர்ந்து, ஐந்தாண்டுகள், உயர்கல்வித் துறை அமைச்சர் பதவியில் இருந்தவர், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., பழனியப்பன். வெற்றி பெற்றார்நடந்து முடிந்த தேர்தலில், இவர் மீண்டும் பாப்பிரெட்டிப்பட்டியில் வெற்றி பெற்றார். அதே போல், தொடர்ந்து நான்காவது முறையாக, பாலக்கோடு தொகுதியில், மாவட்ட செயலர் அன்பழகனும் வெற்றி பெற்றார். இதனால், இவர்களில் யார் அமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு, கட்சியினரிடையே இருந்தது. வேறு துறை:மீண்டும் உயர்கல்வித் துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பழனியப்பன் இருந்தார். ஆனால், அன்பழகனுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததுடன், பழனியப்பன் வசமிருந்த உயர்கல்வித் துறையே ஒதுக்கப்பட்டு உள்ளது. பல மாவட்ட அமைச்சர்களுக்கு, ஏற்கனவே வகித்த துறைக்கு பதிலாக, வேறு துறை மாற்றி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், தர்மபுரி மாவட்டத்திற்கு, அதே உயர்கல்வித் துறை வழங்கப்பட்டு உள்ளது. இதனால், இம்மாவட்ட அ.தி.மு.க.,வினர் மகிழ்ச்சிஅடைந்து உள்ளனர்.