கலை, அறிவியல் படிப்புகளுக்கு அதிகரிக்கும் மவுசு
பொதுவாக, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கல்லூரியில் சேர பொறியியல் பாடத்துக்கு முக்கியத்துவம் அளிப்பர். இன்னும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு முதலிடம் அளிப்பர். கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கலை அறிவியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. சிலர் வேளாண் படிப்புகளில் சேருகின்றனர். தொழில்முறை படிப்புகளுக்கு இடம் கிடைக்காவிட்டால், கலை அறிவியல் படிப்புகளை தேடிச் செல்லும் நிலை உள்ளது. ஆனால், இந்தாண்டு, வழக்கத்தை விட அதிகமாக, கலை அறிவியல் படிப்புக்கு மவுசு கூடியுள்ளது. இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘மத்திய, மாநில அரசு பணி, ஆசிரியர் பணி, வங்கி, தனியார் நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என, அதிக வேலைவாய்ப்பு கருதி, இந்த ஆண்டு மாணவர்கள், கணிசமான அளவு கலை அறிவியல் பட்டப்படிப்புகளை தேர்வு செய்துள்ளனர்.’குறிப்பாக, பி.காம்., டிகிரியில், சி.ஏ., பி.ஏ., பி.ஐ., என பல பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, 10 பிரிவுகள் உள்ளன. மேலும், பி.எஸ்சி., பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பி.எஸ்சி., இயற்பியல், கணிதம், விஸ்காம் என பல பிரிவுகளில் சேர்ந்துள்ளனர். பி.எஸ்சி.,க்கு (விவசாயம்), அதிக அளவில் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.’கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டை விட, 20 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். வேலைவாய்ப்புக்கு பல்வேறு போட்டி தேர்வுகள் எழுத கலை அறிவியல் படிப்புகள் உதவியாக இருக்கும் என்பதாலும், இப்படிப்புக்கு மவுசு அதிகரித்துள்ளது’ என்றனர்.