விரிவுரையாளர் தேர்வு: எழுகிறது ஏராளமான சந்தேகம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 1,195 விரிவுரையாளர் பணிக்குத் தகுதியான ஆட்களை தேர்வு செய்யும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது. மொத்தம் 37 பாடங்களுக்கான விரிவுரையாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்துவந்தது. இப்பணிக்கு விண்ணப் பித்தவர்களில், 30 ஆயிரத்து 259 பேர் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டு, 5,638 பேர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர். நேர்முகத் தேர்வின் முடிவில், ஒவ்வொரு பாடத்திலும் விரிவுரையாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு வருகிறது. கடந்த 24ம் தேதி தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், மைக்ரோ பயாலஜி, தெலுங்கு, இந்தி ஆகிய பாடங்களில் விரிவுரையாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று முன்தினம், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் விரிவுரையாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பூஜ்யம் மதிப் பெண் பெற்றவர்களும் ,விரிவுரையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 200607ம் ஆண்டு 1,000 விரிவுரையாளர்களை தேர்வு செய்தபோது, அப்பணிக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல், 2007ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது, வரிசை எண், தேர்வானவர்களின் பதிவு எண், ஜாதி ரீதியான இடஒதுக்கீடு ஆகிய விவரங்களுடன், தேர்வானவர்கள் பெற்ற மதிப்பெண் விவரமும் வெளியிடப்பட்டது. இதன் மூலம், தகுதியுள்ளவர்கள் தான் விரிவுரையாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்ற நம்பிக்கை, அப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், தற்போது 1,195 விரிவுரையாளர்கள் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலில், வரிசை எண், தேர்வானவர்களின் பதிவு எண் மற்றும் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு ஆகிய விவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் இம்முறை வெளியிடப்படவில்லை. இதனால், விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நியாயமான முறையில் நடத்ததா? தகுதியுள்ளவர்கள் அப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்களா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.