பள்ளி செக்ஸ் கல்வி புத்தகங்களில் பாடமாற்றம்
புதுடில்லி: பார்லிமென்ட் எம்.பி.,க்கள் குழு சிபாரிசின் பேரில், பள்ளிப்படிப்பில் சேர்ப்பதற்கான செக்ஸ் கல்விப்புத்தகங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வியில், செக்ஸ் கல்வியை சேர்க்க வேண்டும் என்று ஐ.நா.,கல்வி அமைப்பு கூறியதை அடுத்து, மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்தது. செக்ஸ் கல்வி புத்தகம் தயாரிக்கும் பொறுப்பு, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விடப்பட்டது. புத்தகம் தயாரிக்கும் விஷயத்தில், செக்ஸ் விஷயத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு குழு சிபாரிசு செய்தது. மத்திய பள்ளிகள் ஒருங்கிணைக்கும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, இந்த புத்தகங்களை பள்ளி பாடமுறையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தது. கடந்தாண்டு சில மாநிலங்களில் இந்த செக்ஸ் கல்வி சேர்க்கப்பட்டது. பா.ஜ.,ஆளும் மாநிலங்கள் எதிர்த்ததை அடுத்து, செக்ஸ் கல்வியை பள்ளிகளில் சேர்ப்பதில் தடை ஏற்பட்டது. இதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து, செக்ஸ் கல்வி புத்தகத்தில் தேவையற்ற விஷயங்களை நீக்கும் வகையில், பார்லிமென்ட் குழு அமைக்கப்பட்டது. பா.ஜ.,வின் வெங்கையா நாயுடு தலைமையிலான இந்த குழு சமீபத்தில் தன் அறிக்கையை பார்லிமென்ட்டில் அளித்தது. இந்த குழுவின் சிபாரிசின்படி, செக்ஸ் கல்வி புத்தகத்தில் சில தகவல்களும், வரைபடங்களும் நீக்கப்பட்டன. செக்ஸ் தகவல்களை வளர் இளம் வயதினர் தெரிந்து கொள்ளும் வகையில் பொதுவான பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட புத்தகங்களை வாபஸ் பெற்று விட்டு, இந்த புதிய புத்தகங்களை பள்ளி பாடமுறையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.