கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் கவனத்திற்கு...
நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர் தொடர்புகொண்டு தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகளும், வங்கி உயர்அதிகாரியின் பதில்களும்: நான் பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளேன். பி.இ., படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளேன். எனக்கு கல்விக்கடன் கிடைக்குமா?-பாலச்சந்தர், செங்கல்பட்டுமத்திய அரசின் விதிமுறையில், கல்விக்கடன் பெற எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஏழை மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கிலேயே கல்விக்கடன் திட்டம் கொண்டுவரப்பட்டது. எனவே, அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் மற்றும் படிப்புகளில் சேர்ந்த எந்த ஒரு மாணவரும் கல்விக்கடன் வேண்டி அருகிலுள்ள வங்கியில் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் குறைவை காரணமாகக் காட்டி, கல்விக்கடன் மறுக்க வங்கிகளுக்கு உரிமை இல்லை. அதேசமயம், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கடன்தர வங்கிகள் தயங்காது என்பதையும் மாணவர்கள் ஞாபத்தில் கொள்ளவேண்டும். எனது மகள் பி.இ., எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இரண்டாமாண்டு படித்து வருகிறாள். போதிய படிப்புக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. கல்விக்கடன் பெற வங்கிகளை அணுகினால், சொத்துப் பத்திரங்கள் வைத்திருக்க வேண்டும் என்கின்றனர்?-தமிழரசன், திருப்பூர்-சிராஜுதீன், சென்னைகல்விக்கடனுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை எந்த செக்யூரிட்டியும் தேவையில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் ஏழரை லட்சம் ரூபாய் வரை மூன்றாவது நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும். அப்போது, பத்திரங்கள் காட்டினால் போதும். உள்நாட்டில் படிக்க 10 லட்சம் ரூபாய் வரையும், வெளிநாட்டில் படிக்க 20 லட்சம் ரூபாய் வரையும் வங்கி மூலம் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு வீடு, மனை, எல்.ஐ.சி., பத்திரங்கள் போன்றவைகளை செக்யூரிட்டியாக வங்கிகளில் கொடுக்கலாம். வெளிநாட்டு படிப்புக்கான கடனுக்கு 15 சதவீத மார்ஜின் செலுத்த வேண்டும். படிப்பு செலவு மற்றும் விடுதி செலவு போன்ற அனைத்தும் கடனாக வழங்கப்படும். வங்கியைப் பொறுத்து பெண்களுக்கு கல்வி கடன் வட்டியில் அரை சதவீத சலுகையுண்டு.இந்த விதிமுறைகளை பெற்றோரும், மாணவர்களும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும். இதனை சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் பொறுமையாக குறிப்பிட்டு பேசுங்கள். கல்விக்கடன் குறித்து விரிவாக கூறுங்களேன். கல்விக்கடனுக்கு மானியம் அல்லது கடன் தள்ளுபடி கிடைக்குமா?- தேவராஜன், மேட்டுப்பாளையம்-இசக்கி, விருதுநகர்மாணவர்கள் பணவசதி இல்லாததால் தொடர்ந்து படிக்க முடியாமல் போய்விடக் கூடாது என்ற நோக்கத்தில் கல்வி கடன் வழங்கப்படுகிறது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி 26 பொதுத்துறை வங்கிகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் அந்தந்த வங்கிகள் சில மாற்றங்களை செய்து கல்வி கடன்களை வழங்குகின்றன. சில தனியார் வங்கிகள் சமுதாயக் கண்ணோட்டத்துடன் கல்விக்கடன் வழங்குகின்றன. கல்விக்கடனை பெற வீட்டுக்கு அருகிலுள்ள பொதுத்துறை வங்கி கிளைகளை மாணவர்கள் அணுகலாம். அனைத்து வகையான இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளுக்கும் கடன் வழங்கப்படும். அந்த படிப்பை படித்தால் வேலை கிடைக்க வேண்டும். அந்த படிப்பு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், அகில இந்திய மருத்துவ கல்வி கவுன்சில், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசு சம்பந்தப்பட்ட அமைப்புகளால் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.கல்விக்கடன் மீது சலுகை அளிக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகுறித்து முழுமையான விவரங்கள் இதுவரை வங்கிகளுக்கு வரவில்லை. அதுகுறித்த தகவல்கள் வந்தவுடன் உடனடியாக நாளிதழ்களில் வெளியாகும். எம்.சி.ஏ., படிக்க உள்ளேன். கல்விக்கடன் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?-ரீஜன், சிவகங்கைகல்விக்கடன் பெற பிளஸ் 2, இளநிலை பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், நீங்கள் சேர்ந்துள்ள கல்வி நிறுவனம் மற்றும் படிப்பிற்கான அட்மிஷன் சான்று, படிக்கும் படிப்பிற்கான கல்லூரிக் கட்டண மதிப்பீடு விவரச் சான்று, இருப்பிட சான்றிதழ், பெற்றோர் அல்லது உடன் பிறந்தவரது வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். எம்.பி.ஏ., படிப்பில் சேர்ந்துள்ளேன். கல்விக்கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருந்தும், கடன் தராமல் வங்கி அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர்?-சதீஷ், திருப்பூர்-முருகேஷன், மதுரைகல்விக்கடன் குறித்த விண்ணப்பத்தை பதிவு தபாலில் அனுப்பி வைத்துவிட்டு பின்னர், தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வங்கி உயர்அதிகாரியை நேரில் அணுகி முறையிடுங்கள். ஏர் ஹோஸ்டஸ் படிப்புக்கு கல்விக்கடன் கிடைக்குமா?-கிருஷ்ணன், விருதுநகர்ஏர் ஹோஸ்டஸ் போன்ற ‘கேரியர் ஓரியண்டட்’ படிப்புகளுக்கு மத்திய அரசின் கல்விக்கடன் வழங்கும் திட்டத்தில் நேரடியாக இடம்பெறவில்லை. அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கு மட்டுமே வங்கிகளில் கல்விக்கடன் உண்டு. மற்றபடி வங்கிகள் விருப்பப்பட்டால் இதுபோன்ற படிப்புகளுக்கும் கடன் வழங்குவது உண்டு. கல்விக்கடன் மீதான வட்டி முறை, திரும்ப செலுத்தும் முறை ஆகியவை குறித்து கூறுங்களேன்?-ஜெயப்பிரகாஷ், தென்காசிகல்விக்கடன் பெற்று படித்த மாணவர், படிப்பு முடித்தவுடன் வேலைக்குச் செல்லும் பட்சத்தில் வாங்கிய கடனை ஆறு மாதத்திலிருந்து செலுத்த துவங்க வேண்டும். உடனடியாக வேலை கிடைக்காதவர்கள் ஒரு ஆண்டு வரை கடன் தவணை செலுத்தாமல் இருக்க வழிவகை உள்ளது. அதன்பிறகு உரியவர்கள், கடன் தவணையை முறைப்படியாக கட்டத் துவங்கி விட வேண்டும். ஐந்து ஆண்டு வரை தனிவட்டி வசூலிக்கப்படும்.கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கடனுடன் வட்டியையும் சேர்த்து கட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் படிக்க வேண்டும். வேலை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டால் படிப்புக்காக வங்கியில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த பெற்றோர்கள் பெரும் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுவிடும். மற்றவர்களை காட்டிலும் கல்விக் கடன் பெற்று படிக்கும் மாணவர்களுக்கு கடமைகள் அதிகம். எனவே, கல்விக்கடன் இருப்பதை உணர்ந்து படியுங்கள். பிளஸ் 2வில் 1108 மதிப்பெண் பெற்றேன். தற்போது பி.டெக்., படிப்பில் இடம் கிடைத்துள்ளது. வங்கிக்கடன் கேட்டு அருகிலுள்ள வங்கியை அணுகினால், கணக்கு வைத்திருக்கும் வங்கியில் தான் கல்விக்கடன் பெற முடியும் என்கிறார்கள்?-சந்தோஷ், கோவைஏற்கனவே கணக்கு வைத்துள்ள வங்கியில் தான் கல்விக்கடன் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. மத்திய அரசும் இதை தெளிவுபடுத்தியுள்ளது.