ஆசிரியர் தேர்வுப் பட்டியல் அடுத்தவாரம் வெளியாகிறது
தொடக்க கல்வித் துறையில், மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 1,943 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான சான்றிதழ் சரிபார்த்தல் பணி, கடந்த 6, 7 தேதிகளில் மாநிலம் முழுவதும் நடந்தன. இதில், 7,500 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் இருந்து, பதிவு மூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்த 1,943 பேரின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடந்து வருகிறது. இந்தப் பட்டியல், 15ம் தேதிக்குள் வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. ஆனால், தீபாவளிப் பண்டிகை முடிந்தபின், அடுத்த வாரத்தில் தேர்வுப் பட்டியலை வெளியிட தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், 67 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுப் பட்டியலும், அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.