உள்ளூர் செய்திகள்

ஆன்லைனில் கல்வி அலுவலக ஊழியர் கவுன்சிலிங்

  கோவை: கல்வி அலுவலக ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பான கவுன்சிலிங்கை, இனி ‘ஆன்லைன்’ மூலம் நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அக்., 14ல் நடைபெறவுள்ள கல்வி அலுவலக ஊழியர் கவுன்சிலிங், முதன் முறையாக ஆன்லைன் முறையில் நடைபெறவுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டத்துக்குள் மாறுதல் என பல்வேறு பிரிவுகளில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த வரிசையில் அக்., 14ல் கல்வி அலுவலக ஊழியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்கும் ஆசிரியர்கள், ஊழியர்களின் அலைச்சலைத் தவிர்க்க, இந்த ஆண்டு முதல் ‘ஆன்லைன்’ கவுன்சிலிங் முறையை பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த இடைநிலை ஆசிரியர் கவுன்சிலிங்கில் ஆன்லைன் கவுன்சிலிங் முறை அறிமுகம் செய்யப்பட்டது. கவுன்சிலிங்கில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு ஒரே இடத்தில் உடனுக்குடன் ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது. இதே போல், நாளை நடைபெறவுள்ள கல்வி அலுவலக ஊழியர் கவுன்சிலிங்கையும் ‘ஆன்லைன்’ முறையில் நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களும் ‘ஆன்லைன்’ முறையில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கென ஒவ்வொரு அலுவலகத்துக்கும் ஏற்கனவே இருந்த இன்டர்நெட் வசதியுடன் ‘வெப் கேமிரா’ வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சேதுராம வர்மா கூறுகையில், “கல்வி அலுவலக உதவியாளர் பதவியில் இருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. கோவை வருவாய் மாவட்டத்தில் நான்கு ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது. சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குனர், ஊழியர்களுடன்  ஆன்லைனில் பேசி விபரங்களை சேகரிப்பார். புதிய பணியிடத்துக்கு மாநில அளவிலான பணிமூப்பின்படி தயாரிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடப் பட்டியலை விபரங்களை ஒப்பிட்டு உடனுக்குடன் ஆணை வழங்குவார்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்