உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுக்கு புத்தக சுமை: ஐகோர்ட் நோட்டீஸ்!

இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வாணிஸ்ரீ ஞானேஸ்வரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு:  பள்ளிக் குழந்தைகள், தங்கள் உடல் எடையில் பாதி அளவுக்கு பாடப் புத்தகங்கள் அடங்கிய பையை சுமந்து பள்ளிகளுக்கு வருகின்றனர். இதனால், அவர்களின் உடல்நலன் கடுமையாக பாதிக்கப் படுகிறது. தமிழகத்தில் 5,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், 3,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் 80 கோடி ரூபாய் மதிப்பில், எட்டு கோடி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதிகச் சுமையுள்ள பைகளை குழந்தைகள் தூக்கிச் செல்வது பெரிய பிரச்னையாக உள்ளது. இதனால், குழந்தைகளுக்கு முதுகுவலி, கழுத்து வலி, நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன.குழந்தைகள் தூக்கிச் செல்லும் பையின் எடை, அந்த குழந்தையின் எடைக்கு 10 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. குழந்தைகளின் பாடப் புத்தகங்களும், அதற்கான நோட்டுப் புத்தகங் களும் அதிகமாக உள்ளன. பாடப் புத்தகங்களுடன் சேர்த்து சாப்பாடு, சிற்றுண்டி, தண்ணீர் பாட்டில், நூலக புத்தகங்கள் என அனைத்தும் சுமந்து செல்ல வேண்டியுள்ளது.தேவையின்றி கூடுதலாக நோட்டு புத்தகங்களை வாங்க வேண்டும் என பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்துகின்றன. கனமான பைகளை குழந்தைகள் தூக்கிக் கொண்டு செல்வதால், பள்ளி செல்வது என்றாலே அவர் களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. அதிக கனமுள்ள பைகளை சுமந்து கொண்டு ஓடிச் சென்று பஸ்களில் ஏறுகின்றனர். இதனால் பல நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை விட அதிகமான சுமையை சுமக்கின்றனர். குறைந்தபட்சம் 12 கிலோ எடையை அவர்கள் சுமக்கின்றனர். எனவே, குழந்தைகளின் எடையில் 10 சதவீதத்துக்கு அதிகமான சுமைகளை சுமக்கக் கூடாது என பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும். அனைத்து பாடங்களையும் ஒரே நாளில் கற்பிக்காத வகையில், கால அட்டவணையை மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதிகள் பானுமதி, பால்வசந்தகுமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு அதற்கு பதிலளிக்கும் படி பள்ளி கல்வி இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிக் கல்வி இயக்குனர், கல்வித்துறை செயலர், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளருக்கு உத்தரவிட் டுள்ளது. சி.பி.எஸ்.இ., ஆய்வாளருக்கு தனியாக நோட்டீஸ் அனுப்ப அனுமதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்