உள்ளூர் செய்திகள்

பி.எட்., படித்தவர்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர் பணி

கோவை: வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பணி நியமனத்துக்கான விண்ணப்பங்கள், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள வட்டார வள மையங்களில் ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் சார்பில் இதற்கான போட்டி எழுத்துத் தேர்வு, 2010 ஜன., 31ல் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ளது. தமிழ் 18, ஆங்கிலம் 18, கணிதம் 283, இயற்பியல் 29, வேதியியல் 30, தாவரவியல் 27, விலங்கியல் 45, வரலாறு 90, புவியியல் 24, என மொத்தம் 564 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. பி.எட்., படிப்பில் இப்பாடங்களை முக்கிய பாடமாக படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்கள் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு விண்ணப்ப படிவத்தின் விலை 50 ரூபாய். நேற்று மாலை வரை 2 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் விற்பனை ஆகியுள்ளன. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 300 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை(டி.டி) விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய மூன்று வங்கிகளில், ஏதாவது ஒரு வங்கியில் ‘சேர்மன், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை’ என்ற முகவரிக்கு டி.டி.,பெற வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, டிச., 14 கடைசி தேதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்