பி.எஸ்சி., உயிரின வேதியியல்: வேலைவாய்ப்புக்கு மறுப்பு!
பாரதியார் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி.எஸ்சி., பயோ கெமிஸ்ட்ரி பட்டப்படிப்பை, பி.எஸ்சி., கெமிஸ்ட்ரி பட்டப்படிப்புக்கு சமமாக கருதிப் பொதுப்பணிகளில் பணி நியமனம் செய்ய அங்கீகரித்து, கடந்த 1998ல் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம், பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது, பி.எஸ்சி., வேதியியல் பாடத்துக்கு தேர்வு செய்பவர்களில் உயிரின வேதியியல் பட்டம் பெற்றவர்களாக சிலர் உள்ளனர் என்றும், இவ்வாறு உயிரின வேதியியல் பட்டம் பெற்றவர்களை, வேதியியல் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யலாமா என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார். பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரித்துள்ள பல்கலைக் கழகங்கள் வழங்கும் உயிரின வேதியியல் பட்டப்படிப்பை, வேதியியல் பட்டப்படிப்புக்கு சமமாக கருதி, பொதுப்பணிகளில் நியமனம் செய்யலாமா என்பது பற்றி, இணை நிர்ணயக் கல்வி பரிசீலிப்புக் குழுவிடம் (ஈகுவலன்ஸ் கமிட்டி) பரிந்துரை கோரப்பட்டிருந்தது.டி.என்.பி.எஸ்.சி.,யில் நடந்த கல்வி பரிசீலிப்புக் குழுக் கூட்டத்தில், உயிரின வேதியியல் படிப்பை, வேதியியல் படிப்புக்கு இணையாக கருதி, பொதுப்பணிகளில் வேலை வாய்ப்புக்கு பரிந்துரைக்க இயலாது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, பணியாளர் நலத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், கல்வி பரிசீலிப்புக் குழுவின் பரிந்துரையை ஏற்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துப் பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பி.எஸ்சி., உயிரின வேதியியல் பட்டப்படிப்பை, பி.எஸ்சி., வேதியியல் பட்டப்படிப்புக்கு இணையாகக் கருதி பொதுப்பணிகளில் வேலைவாய்ப்புக்காக அங்கீகாரம் அளிக்க முடியாது என, குறிப்பிடப்பட்டுள்ளது.