நிதி இல்லாமல் முடங்கும் சிறப்பு பள்ளிகள்!
இதில் படிக்கும் 17,000 குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு திட்டத்தின் கீழ் தர்மபுரி, திருச்சி, திருவண்ணாமலை, நாமக்கல், விருதுநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கோவை, திருநெல்வேலி, வேலூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 451 சிறப்பு பள்ளிகள் இயங்குகின்றன. மாணவர்களுக்கான உணவு, சிறப்புப்படி மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் ஆகியவற்றை மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை வழங்கி வந்தது. கடந்த மே மாதம் முதல் இத்திட்டத்திற்கு நிதி வழங்கப்படவில்லை. வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் ஒரு பகுதி தொகை மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.பல மையங்களில் கடந்தாண்டு ஒதுக்கீட்டில் மீதம் உள்ள தொகையை வைத்து பள்ளியை நடத்தி வந்தனர். இப்போது அனைத்து பள்ளிகளும், நிதி ஒதுக்கீடு இல்லாத நிலையில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் ஏழு மாதமாக சம்பளம் இல்லாத நிலையில் பணியில் தொடர தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், 17,259 மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இவர்கள் மீண்டும் குழந்தை தொழிலாளர்களாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.