உள்ளூர் செய்திகள்

‘முறைப்படுத்தப்படாத மூலிகைகள் பயன்பாடு கவலை அளிக்கிறது’

கோவை: “உலகளவில் பரிசோதிக்கப்படாத, முறைப்படுத்தப்படாத பாரம்பரிய மூலிகை மருந்துகளின் புழக்கம் கவலை அளிப்பதாக உள்ளது. இவற்றின் நிஜ தன்மைகளை கண்டறிந்து அறிவியல்பூர்வ ஆராய்ச்சி மேற்கொள்ள முறைப்படுத்துதல் அவசியம்,” என்று பாதுகாப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழக இயக்குனர் ஸ்ரீவத்சவா பேசினார். பாரம்பரிய மருத்துவ மூலிகை தாவரங்கள் பற்றிய கருத்தரங்கு, பாரதியார் பல்கலையில் நடந்தது. கருத்தரங்கின் துவக்க விழாவில் பாதுகாப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின்(டி.ஆர்.டி.ஓ) உயிர் அறிவியல் ஆராய்ச்சி வாரிய இயக்குனர் ஸ்ரீவத்சவா பேசியதாவது: பல்வேறு நோய்களை குணமாக்க மருத்துவ மூலிகை தாவரங்கள் பயன்படுத்தப்படுவது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. பக்க விளைவுகள் இல்லாததுதான் காரணம். வளரும் நாடுகள் மட்டுமல்லாமல், பெரிய நாடுகளிலும் பாரம்பரிய மருத்துவ முறைக்கு பதிலாக மூலிகை மருத்துவம் பயன்படுகிறது. அங்கு 40 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் மூலிகை மருந்துகளை பயன்படுத்துகின்றனர். மேற்கத்திய நாடுகளில் மருத்துவக் கல்லூரிகளிலும் சிறந்த மாற்று மருந்து ஆக கற்பிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் மட்டும் 1990 மற்றும் 1997 ஆண்டுகளில் மருத்துவ மூலிகை தாவரங்களின் பயன்பாடு 380 சதவீதம் அதிகரித்தது. மூலிகை மருத்துவ தாவரங்களின் உலக சந்தை மதிப்பு 60 பில்லியன் டாலர். இதில் இந்தியாவின் பங்கு 50 சதவீதம்.இந்திய மூலிகை தாவரங்களில் இருந்து உயிரி மூலக்கூறுகளை பிரித்தெடுப்பதில் மேற்கத்திய நாடுகள் ஆர்வமுடன் உள்ளன. இந்தியாவில் இந்த தாவரங்களை பயன்படுத்தி ஆன்மிக சிகிச்சை முறையில் நோய்களை குணப்படுத்துகின்றனர். மூலிகை தாவரங்களை முறையாக பயன்படுத்துவதும் ஆராய்ச்சிகள் வாயிலாக முறைப்படுத்துவதும்தான் இப்போது நம் முன் உள்ள முக்கிய சவால். அதற்கு முன் நோய்களை குணப்படுத்துவதில் இந்த மூலிகை தாவரங்களின் உண்மை தன்மையை பரிசோதித்தறிவது முக்கியம். இதன் தரம், ஆவணப்படுத்தல், முறைப்படுத்தல் அவசியம். ஆங்கில மருந்துகளுடன் மூலிகை மருந்துகள் தவறான முறையில் கலப்படம் செய்யப்படுகிறது. மூலிகை தாவரங்களின் நிஜ தன்மையை ஆராய்ந்து முறைப்படுத்துவதன் மூலம், தகுதி வாய்ந்த டாக்டர்களால் மட்டுமே இவற்றை விற்பனை செய்ய முடியும் என்ற நிலையை தடுக்கலாம். உலகளவில் பாரம்பரிய மூலிகை மருந்துகளுக்கு ஆர்வம் அதிகரித்தாலும், பரிசோதிக்கப்படாத, முறைப்படுத்தப்படாத மருந்துகளின் புழக்கம் கவலை அளிப்பதாக உள்ளது. இவற்றின் அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியை தரமாக மேற்கொள்ள, முறைப்படுத்துதல் அவசியம். உலகளவிலான முறைப்படுத்தலை இந்திய மூலிகை தாவரங்கள் பின்பற்ற தவறினால், இத்துறையில் பிற நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளில் இந்தியா போட்டியிட முடியாமல் பின்தங்க நேரிடும். ஆகவே மூலிகை மருத்துவ தாவரங்களின் ஆராய்ச்சியை மேம்படுத்துவதும் முறைப்படுத்துவதும் அவசியம். இவ்வாறு, ஸ்ரீவத்சவா பேசினார். பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் பேசுகையில், “மூலிகை மருந்துகளுக்கான பலமிக்க நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. இவை நம் நாட்டின் புனித பாரம்பரியத்தை விளக்கும் சொத்து. அறிவியல் அணுகுமுறைகளின் வாயிலாக இவற்றை பாதுகாக்க வேண்டும். இந்த தாவரங்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சி பலவிதங்களில் பலன் அளிக்கும்,” என்றார். பல்கலையின் தாவரவியல் துறைத் தலைவர் மணியன், அமைப்பு செயலாளர் பரிமேலழகன், இணை இயக்குனர் கதிர்வேலு உட்பட மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர். ‘மூலிகை கருத்தடை மாத்திரை ரெடி’: “பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தற்போது சில முக்கிய மூலிகைகளை மருந்தாக மாற்றும் ஆய்வு, துறையின் உயிர் அறிவியல் ஆய்வகங்களில் துவங்கப்பட்டுள்ளது. மூலிகை கொசு விரட்டி, தொழுநோய்க்கான மூலிகை மருந்து, மூலிகை பல்வலி மருந்து, மூலிகை டீ, மூலிகை சத்து பானம், வேம்பின் அடிப்படையிலான கருத்தடை மாத்திரை போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன,” என்றார் ஸ்ரீவத்சவா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்