உள்ளூர் செய்திகள்

எலைட் பள்ளி ஆசிரியர்களுக்கு இரட்டை சுமை

பள்ளிக் கல்வித்துறையில் நந்தகுமார் கமிஷனராக இருந்தபோது மாவட்டம் தோறும் எலைட் மாதிரி பள்ளிகள் நடைமுறைக்கு வந்தது. இதன்படி அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2வில் நன்றாக படிக்கும் 250 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உணவு, தங்கும் (உண்டு உறைவிடம்) வசதி ஏற்படுத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது.அரசு பள்ளிகளில் ஏற்கனவே பணியாற்றும் தலைமையாசிரியர், பாடம்வாரியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு எலைட் பள்ளிகளில் மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டனர். அரசு பள்ளிகளில் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு (எஸ்.எம்.சி.,), பெற்றோர் ஆசிரியர் கழகம் (பி.டி.ஏ.,) சார்பில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சில பள்ளிகளில் காலிப் பணியிடமாகவே அது தொடர்கிறது. முன்கூட்டியே இத்திட்டம் துவக்கப்பட்ட சில மாவட்டங்களில் தற்போது ஒன்பதாம் வகுப்பில் இருந்து எலைட் பள்ளிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் பொதுத் தேர்வு, நீட், ஜே.இ.இ., தேர்ச்சி கல்வித்துறை எதிர்பார்த்தது போல் இல்லை. மேலும் எலைட் பள்ளியில் மாற்றுப் பணியாற்றினாலும் சம்பந்தப் பட்ட ஆசிரியரின் அரசு பள்ளி தேர்ச்சிக்கு அவரே பொறுப்பேற்க வேண்டியுள்ளது என்ற புகாரும் எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: எலைட் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை கல்வித்துறை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் நன்றாக படிக்கும் ஒருசில மாணவர்களையும் எலைட் பள்ளிக்கு கொண்டுசென்று விடுகின்றனர். அனுபவம் உள்ள நிரந்தர ஆசிரியர்களையும் அங்கு எடுத்துக்கொண்டு தற்காலிக ஆசிரியரை வைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. பெற்றோரை பிரிந்து இருப்பது, அடுத்தடுத்த தேர்ச்சி விகிதம் குறைவு காரணமாக எலைட் பள்ளியில் சேரும் ஆர்வம் மாணவர்களுக்கு குறைகிறது. அதை மறைக்க விருப்பம் இல்லாத மாணவர்களையும் அங்கு சேர்க்க கட்டாயப்படுத்துகின்றனர். ஆசிரியர்களும் மனஉளைச்சலில் உள்ளனர்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்