இன்ஜினியரிங் தரவரிசை: திருச்செந்தூர் மாணவி முதலிடம்
அண்ணா பல்கலை இணைப்பில் இருக்கும், 440 இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க 1.88 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு, கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். கவுன்சிலிங் கமிட்டியின் www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தரவரிசை விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.தரவரிசையில் ஆட்சேபனை இருந்தால், தகவல் அளித்து மாணவர்கள் தீர்வு காண இன்று முதல் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. தரவரிசை பட்டியலை வெளியிட்டு அமைச்சர் பொன்முடி கூறியதாவது: 1.87 லட்சம் மாணவர்கள் பதிவுக்கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.78 லட்சம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 102 பேர் 200க்கு 200 கட்ஆப் மார்க் எடுத்துள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த நேரா முதலிடமும், தர்மபுரியை சேர்ந்த ஹரிணிகா இரண்டாம் இடமும், திருச்சியை சேர்ந்த ரோஷிணி பாணு மூன்றாம் இடமும் பெற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஓதுக்கீட்டில் இந்தாண்டில் 28,425 மாணவர்கள் தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5,842 அதிகம். மருத்துவ கவுன்சிலிங்கிற்கு ஏற்ப தேதி மாற்றி அமைக்கப்படும்; இன்ஜினியரிங் கவுன்சிலிங் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.