மத்திய அரசின் சாதனை:பள்ளி முதல்வர்களிடம் பிரசாரம்
புதுடில்லி: டில்லி அரசுப் பள்ளி முதல்வர்களுடன் மத்திய அமைச்சர் பூரி ஆலோசனை நடத்தினார். அப்போது, மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை பகிர்ந்து கொண்டார்.மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டில்லியில் உள்ள முக்கிய அரசுப் பள்ளிகளின் முதல்வர்களை, இந்தியா ஹாபிடேட் சென்டரில் நேற்று சந்தித்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகள் குறித்து பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர்களுடன் அவர்களின் மனைவியரும் பங்கேற்றனர். தம்பதியருக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது. மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை நாடு முழுதும் ஒரு மாதத்துக்கு பிரசாரம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி முதல்வர்களுடனான இந்த சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.