பள்ளிகளில் மாலை நேர வகுப்புக்கு தடை
சென்னை: அரசு பள்ளிகளில் படிக்கும் பொது தேர்வு மாணவர்களுக்கு, உரிய அனுமதியின்றி மாலை நேர வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலை, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டியது கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டதாக நேற்று தகவல் பரவியது. ஆனால், அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை; பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவித்தது. இந்நிலையில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தடை விதித்து உள்ளனர். அரசு பள்ளிகள், உண்டு, உறைவிட சீர்மிகு பள்ளிகள், மாதிரி பள்ளிகள் ஆகியவற்றில், பள்ளிக்கல்வித் துறையின் அனுமதியின்றி, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.