நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
சென்னை: கரும்பு சாகுபடியை அதிகரிக்க, நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.பல்வேறு மாவட்டங்களில், 2015ம் ஆண்டு வரை, 6 லட்சம் ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி நடந்தது. அரசு அறிவிக்கும் கொள்முதல் விலையை, சர்க்கரை ஆலைகள் முறையாக வழங்கவில்லை. இதனால் நிலுவைத்தொகை 1,000 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்ததால் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் குறைந்தது. தற்போது, 3.60 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடக்கிறது.மாநிலத்தில் பொது, கூட்டுறவு, தனியார் என 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் 10 சர்க்கரை ஆலைகள் மட்டுமே 2022ம் ஆண்டு சர்க்கரை உற்பத்தி செய்தன. கரும்பு பற்றாக்குறையால் பல சர்க்கரை ஆலைகள் மூடும் நிலையில் உள்ளன. கரும்பு சாகுபடியை அதிகரிக்க வேளாண்மை மற்றும் சர்க்கரை துறை வாயிலாக பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி கரும்பு சாகுபடியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பின்பற்றப்படும் தொழில்நுட்பங்கள் குறித்தும், அறுவடை இயந்திரங்கள் பயன்பாடு குறித்தும் முதற்கட்டமாக, 2,000 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதை நேரில் காண முதற்கட்டமாக 100 விவசாயிகள் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். இதற்காக வேளாண்துறைக்கு அரசு 30 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளது. இத்துடன் 10 மாவட்டங்களில் தொடர்ந்து கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பட்டியலும் தயாராகிறது.