உள்ளூர் செய்திகள்

தொலைதுார கல்வி: பல்கலைகளுக்கு கோர்ட் நோட்டீஸ்

புதுடில்லி: மாநிலங்களுக்கு இடையிலான தொலைதுார கல்விக்கு யு.ஜி.சி., தடை விதித்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனு மீது உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.கடலுார் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதுார கல்வி வழங்க, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் அளித்தது. ஆனால், சொந்த மாநிலத்தில் தொலைதுார கல்வி வழங்கலாம் என்றும், பிற மாநிலங்களில் தொலைதுார கல்வி வழங்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணாமலை பல்கலைக்கழகம் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், யு.ஜி.சி.,யின் நிபந்தனையை ரத்து செய்தது. இதை எதிர்த்து யு.ஜி.சி., இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்தது. இதேபோல, தொலைதுார கல்வி விதிகளை மீறி மாணவர்களை சேர்க்க கூடாது என யு.ஜி.சி., பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பாரதிதாசன், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களின் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாநிலத்துக்கு வெளியில் தொலைதுார கல்வி மையங்கள் துவங்குவதை தடுக்கும் வகையில் விதிகளை பிறப்பிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, யு.ஜி.சி.,யின் விதிகள் செல்லும் என உத்தரவிட்டது. அதே நேரம், மாநிலத்துக்கு வெளியே தொலைதுார கல்வியில் பதிவு செய்து படித்துக் கொண்டிருப்பவர்கள், படிப்பில் சேர பதிவு செய்தவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த விலக்கு அளிக்கும் உத்தரவை எதிர்த்து, யு.ஜி.சி., உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்கும்படி, புதுடில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்கலைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்